கொரோனா வைரஸின் கொடூரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசுபொருளாக இருக்கப்போகின்றது என்பதே யதார்த்தம். இந்த கொடூர வைரஸுக்கான மருந்தை கண்டுபிடித்து இதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாலும் கூட கொரோனா வைரஸால் மரணித்தவர்கள் ,பாதிக்கப்பட்டவர்கள், தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் என ஒரு பெரும் பட்டியலே நீளப்போகின்றது.

இவற்றுக்கு மத்தியில் சேவ் தி சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனம் மற்றுமொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா பிரச்சினை முடிந்த பின்னர் உலகம் முழுவதும் 97 லட்சம் பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக சேவ் தி சில்ரன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பிரச்சினை காரணமாக உலகம் முழுவதும் 160 கோடி பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கி இருக்கும் பெண் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது அதிகரிக்கும், குழந்தை திருமணங்கள் சிறுவயது கர்ப்பங்கள் ஆகியனவும் உயரும் என குறித்த தொண்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

இவற்றுக்கு மத்தியில் கொரோனா பிரச்சினையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதி தொகையின் அளவு குறையும். எதிர்வரும் 18 மாதங்களில் வறிய நாடுகளில் கல்விக்காக செலவளிக்கும் தொகை 7800 கோடி டொலர்களாக குறையும்.  மேலும் ஏழை பணக்காரர் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும் கல்விக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை இல்லாமல் செய்ய உலக நாடுகளும் நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை வழங்க வேண்டுமென சேவ் தி சில்ரன் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க வறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதுடன் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலும் அதிகரித்துள்ள நிலையில் உலகில் கல்வியறிவற்றோர் தொகை மேலும் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

கொரோனாவின் தாக்கம் கல்வி பொருளாதாரம் என பரந்து விரிவடைந்து செல்வதை இதன் மூலம் அவதானிக்க முடிகிறது. குறித்த வைரஸை முற்றாக ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படாதவரை முழு உலகுமே ஸ்தம்பிதம் அடையும் வாய்ப்புக்களே காணப்படுகின்றன.

தொழில்நுட்ப ரீதியாகவும் நவீன அபிவிருத்தி வாயிலாகவும் உலகம் சுருங்கி விட்டது எனவும் ஒரு கிராமம் போல ஆகி விட்டது எனவும் பெருமைப்பட்ட நாம் இன்று அதனால் வந்த தீமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. சீனாவின் வூஹான் கிராமத்தில் ஏற்பட்ட இந்த வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்துள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சாதாரணமாக யுத்தத்தால் மரணிப்போரை விடவும் அதிக எண்ணிக்கையானோர்  மரணத்தை தழுவியுள்ளனர் .

அதுமாத்திரமன்றி நாடுகளுக்கிடையிலான தரைவழி வான்வழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் முன்னைய காலங்களைப் போன்று மக்கள் துருவப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த பொது எதிரியை முற்றாக இல்லாதொழித்து உலகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து வெற்றி கொள்ளலாம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்