(இராஜதுரை ஹஷான்)

கொவிட்- 19 வைரஸ்  பரலலை தேர்தல் பிரசாரமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவராலும்  பலவீனப்படுத்த முடியாது. நெருக்கடியான நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர் தரப்பினர் முன்னெடுக்கும் தேர்தல் பிரசாரங்கள் வெறுக்கத்தக்கது. பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம்  செலுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஷான் சேமசிங்க தெரிவித்தார்.

மேலும் , கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலுக்கான  திகதியை அறிவித்தது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பாதுகாப்பான  முறையில் முன்னெடுக்கப்பட்டன. கந்தக்காடு புனர்வாழ்பு மையத்தில் இருந்து புதிய வைரஸ்  தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து   வைரஸ் தொற்றின் இரண்டாம் சுற்று ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொவிட் -19 வைரஸ்  பரவலை  காரணம் காட்டி, எதிர் தரப்பினர் அரசாங்கத்தை  பலவீனப்படுத்த முடியற்சிக்கிறார்கள். நெருக்கடியான  நிலையில்  குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு அரசியல் இலாபம் தேடிக் கொள்வது  வெறுக்கத்தக்க செயற்பாடாகும்.          அரசியல் ரீதியில் பெரும்பான்மையின  மக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் பொதுத்தேர்தலில் ஏற்படாது.

 பொதுமக்களின்  பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்கு  அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும்.  மக்களும்  தற்போதைய நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேவையற்ற பயணங்களை முழுமையாக தவிர்த்துக் கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.