(இராஜதரை ஹஷான்)

ஐக்கிய  தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும்,  ஐக்கிய  மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும்  டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை, பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. அரசியல்வாதிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசியலமைப்பினை திருத்த வேண்டிய தேவை கிடையாது.

தீவிரவாத மற்றும்  அடிப்படைவாத கொள்கைகளை உடைய  அரசியல்வாதிகளுடன் ஒருபோதும் ஒன்றினைய மாட்டோம்.  தமிழ்-முஸ்லிம் சமூகத்தினருக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களின் ஆதரவுடன்  சிறந்த தேசியத்தை  கட்டியெழுப்புவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையில் ஆரம்ப காலத்தில் இருந்து நெருங்கிய  உறவுநிலை காணப்படுகிறது. இந்த உறவு  இலங்கையினை  மாத்திரம் வரையறுத்தது அல்ல. சர்வதேச முஸ்லிம் சமூகத்தினருடன்  நெருங்கிய நல்லுறவு காணப்படுகிறது. அதுவே எமது ஆட்சியின்  பலமாக காணப்பட்டது.  2015ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச உறவுகள் குறுகிய நிலைக்குள் தள்ளப்பட்டன.

  வடக்கிலும், தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட்டங்களில்  ஈடுப்படுவதற்கு ஆரம்ப கால அரசியல்  தலைமைகளின் தவறான அரசியல்  தீர்மானங்களே  காரணம். 30வருட கால சிவில் யுத்தம்  அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பின் ஊடாக தோற்கடிக்கப்பட்டு    சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம்  கட்டியெழுப்பப்படவில்லை மாறான இனங்களுக்கிடையில் பிரிவினைவாதம்   தோற்றுவிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு  அரசியல் ரீதியில்  மக்கள்  செய்த தவறை  இடம் பெற்று முடிந்த  ஜனாதிபதி தேர்தலில் திருத்திக்கொண்டார்கள். பொதுத்தேர்தலிலும்  தவறுகள் திருத்தப்படும். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள்  எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க   ஆகியோருடன் டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை  எமக்கு கிடையாது. இவர்களின் அரசியல் கொள்கைகள் முற்றிலும் மாறுப்பட்டது. இரு தரப்பினரும் ஒருபோதும்  இணைந்து செயற்பட முடியாது.

 தீவிரவாதம், மற்றும் பிரித்தாளும் கொள்கையினை கொண்டவர்களை புதிய அரசாங்கத்தில்  ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம். முஸ்லிம் , தமிழ் சமூகத்தினருக்கு பொதுஜன பெரமுனவில் முன்னுரிமை  வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களையும் ஒன்றினைத்து  இனவாதமற்ற தேசியத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம் என்றார்.