புரட்சித் தமிழன் சத்யராஜ் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 42 ஆண்டு நிறைவு செய்திருக்கிறார்.

1978ஆம் ஆண்டில் வெளியான 'சட்டம் என் கையில்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். இந்தப்படம் வெளியாகி 42 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இணையத்தில் 'சத்யராஜ் 42 'என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி இருக்கிறது.

இதுதொடர்பாக அவர் சரித்திரத்தை புரட்டி பார்க்கும் பொழுது அவர் 'சட்டம் என் கையில்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாவதற்கு முன்னரே 'கோடுகள் இல்லாத கோலங்கள்' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அத்துடன் இவரது இயற்பெயர் ரெங்கராஜ் என்பதும், இவர் ஒரு பட்டதாரி என்பதும், இவர் நடிப்பில் வெளியான 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' படத்தின் டைட்டில் கார்டின் மூலம் தெரியவருகிறது.

வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் 'கடலோர கவிதைகள்' என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார். அத்துடன் இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பர படங்களில் நடிக்கும் மொடல்... என பன்முக தளங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

திரை உலகில் சென்டிமென்ட் என்பது தற்போது வரை பிரசித்தம். ஆனால் இவர் அதிலெல்லாம் ஆர்வம் காட்டாமல் திரையுலகில் பயணிப்பதால் இவரை 'கலையுலக பெரியார்' என்றும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

'கட்டப்பா' என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல், அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்களை காத்திருக்க வைத்த சக்தியும் படைத்தவர். இவர் தற்போது கூட மடை திறந்து, பார்ட்டி, தீர்ப்புகள் விற்கப்படும், காக்கி ஆகிய படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரது அனுபவத்தை எண்ணி எண்ணி வியக்கும் ரசிகர்கள், 42 ஆண்டு நிறைவு செய்ததை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.