'சூரரைப் போற்று' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நவரசா என்ற பெயரில் தயாராக இருக்கும் வலைதள தொடரில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'சூரரைப்போற்று" என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

இதைத்தொடர்ந்து அவர் முன்னணி டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'நவரசா' என்ற வலைதள தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வலைதளத் ‌ தொடர் 9 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயங்களையும் முன்னணி இயக்குனர்கள் இயக்குகிறார்கள். இதில் மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சித்தார்த், நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் ஜெயேந்திரா  உள்ளிட்ட ஒன்பது இயக்குனர்கள் இயக்குகிறார்கள். 

இந்த தொடர் மூலம் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். சித்தார்த் நடித்த '180' என்ற படத்தை இயக்கிய ஜெயேந்திரர் ஒரு அத்தியாயத்தை இயக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது முடக்கத்தின் காரணமாக  திரைப்பட படப்பிடிப்பு ஏதும் நடைபெறாத இந்த சூழலில் நடிகர் சூர்யா, சூழலுக்கு ஏற்ற வகையிலும், ரசிகர்களின் ரசனைக்கேற்ப தன்னை உருமாற்றிக் கொள்வதற்காக இது போன்ற வலைத்தள தொடர்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.