அனுமதி பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுடன் இருவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து ரத்தினகல கிராமத்திற்கு சட்ட விரோதமான முறையில் 54 மதுபான போத்தல்களும் 50 பியர் போத்தல்களையும் வேன் ஒன்றில் கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில் தலவாக்கலை நகரில் போக்குவரத்து பொலிஸாரால் சந்தேகப்பட்டு சோதனை செய்த போது மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மீண்டும் கொவிட் 19 வைரஸ் பரவல் தோன்றும் அபாயம் உள்ளதால் ஊரடங்கு அமுல் படுத்த வாய்ப்புண்டு என எண்ணி சட்டவிரோதமான முறையில் அதிகளவில் விற்பதற்காக இவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன் அச்சந்தேகநபர்கள் மீது நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அன்றைய தினம் அச்சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் எனவும் மதுபான போத்தல்கள் மற்றும் வாகனத்தை பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும் 17 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.