(ந.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததோடு, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்திட்டம் எதனையும் கொண்டிராத தற்போதைய அரசாங்கம் பொதுத்தேர்தலில் தமக்கு வாக்களித்து, அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறு கோருவதற்கு என்ன அருகதையைக் கொண்டிருக்கிறது? என்று கேள்வியெழுப்பிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டத்தை இன்றைய தினம் வெளியிடவிருப்பதாகவும் அறிவித்தார்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த போதிலும், அதனை அலட்சியம் செய்த பொதுஜன பெரமுன அரசாங்கம் தேர்தலை நடத்துவதிலேயே குறியாக இருந்தது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டடார். தனது உரையில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:

நாட்டில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவுகிறது என்றுகூறி ஆரம்பத்தில் வெலிசறை கடற்படை முகாமை மூடினார்கள். இப்போது வெலிக்கடை சிறைச்சாலையை மூடினார்கள். மீண்டும் பாடசாலைகளை மூடினார்கள். இப்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரேயொரு வழி மாத்திரமே உள்ளது. இந்த அரசாங்கத்தையும் முழுவதுமாக மூடிவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிப்பதொன்றே இதற்குத் தீர்வாகும். 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் முன்னெடுக்கின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் ஏற்கனவே வலியுறுத்தினேன். எனினும் அரசாங்கம் அதனை முன்நிறுத்தி எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது எமது நாட்டிற்குப் புதியதொரு சவாலாகும். அரசாங்கம் ஆரம்பத்தில் இதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையில் இருக்கவில்லை. எனவே நாம் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகக் கூறினோம்.

எனினும் தொடர்ச்சியாக அரசாங்கம் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருந்து வந்திருக்கிறது. பொதுத்தேர்தலை நடத்துவது ஒன்றே ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவின் ஒரேயொரு தேவைப்பாடாகும். தேர்தலை எப்போதும் காலந்தாழ்த்திக் கொண்டேயிருக்க முடியாது என்பதால், நாம் தேர்தலை நடத்துவதற்கு உடன்பட்ட போதிலும், மீண்டும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனை செய்தல், கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகிய படிமுறைகளைப் பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் அதனைக்கூட சரிவரச் செய்யாத அரசாங்கத்தினால் எவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்?

நாட்டின் சுகாதார அமைச்சர் இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சுகாதார அமைச்சு, நிதியமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியன இணைந்து செயற்பட வேண்டிய தற்போதைய சூழ்நிலையில் சுகாதார உத்தியோகத்தர்களிடமும், பாதுகாப்புப் பிரிவினரிடமும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், ஒரு பிரிவினரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குவது வெற்றியளிக்காது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கென உலக சுகாதார ஸ்தாபனம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்களினாலும் சர்வதேச நாடுகள் பலவற்றினாலும் பெருமளவான நிதியுதவி மற்றும் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது? அதனை அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திவிட்டதா? அல்லது ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5000 ரூபா வழங்குவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டதா? அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தாமல், ஒருபோதும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது. பொருளாதாரத்தை சீர்செய்வதற்கான முறையான செயற்திட்டமொன்றை வகுப்பது மிகவும் அவசியமாகும். அத்தகையதொரு பொருளாதார மீட்சி செயற்திட்டத்தை நாம் நாளைய தினம் வெளியிடவிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த்தோடு, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்திட்டம் எதனையும் கொண்டிராத தற்போதைய அரசாங்கம் பொதுத்தேர்தலில் தமக்கு வாக்களித்து, அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறு கோருவதற்கு என்ன அருகதையைக் கொண்டிருக்கிறது? எனவே நாட்டினதும், மக்களினதும் நலனை முன்நிறுத்தி செயற்படும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.