(எம்.மனோசித்ரா)

தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேசரிக்கு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியப்படுமா என்பது குறித்து வினவிய போது இவ்வாறு தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிடுகையில் ,

கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாவது அலை ஏற்படும் என்று நாம் நம்பவில்லை. எனினும் அந்த அபாயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எனவே தேர்தலை நடத்துவது சவாலாக அமையாது என்று எண்ணுகின்றோம்.

இதே வேளை நாட்டில் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான அபாயம் உணரப்பட்டால் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை கடுமையாகப் பின்பற்றினால் அதிலிருந்து மீள முடியும். அனைத்து தேர்தல் பிரசாரங்கள் மற்றும் ஏனைய அனைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போதும் முதற்கூறிய இரு விடயங்களையும் பின்பற்றினால் இலகுவாக அவதான மட்டத்திலிருந்து எம்மால் மீள முடியும்.

நாம் பொது மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் கோரிக்கையொன்றினை முன்வைக்கின்றோம். அபாய மட்டத்திலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும். இதே வேளை உரிய தரப்பினரிடம் மிக முக்கிய கோரிக்கையொன்றினையும் முன்வைக்கின்றோம். மேலும் உதாசீனப்படுத்தாமல் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானிப்படுத்துமாறு கோருகின்றோம்.

மாறாக அவற்றை வர்த்தமானிப்படுத்தாமல் போலியாக முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் , கைகளைக் கழுவுமாறும் , சமூக இடைவெளியைப் பேணுமாறும் கூறிக் கொண்டிருப்பது பயனற்றது. எனவே அவற்றை துரிதமாக வர்த்தமானிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் வாக்குரிமையே பிரதான காரணியாகும். எனவே ஜனநாயக நாடொன்றில் தேர்தல் - பாராளுமன்றம் என்பன இன்றியமைதாவையாகும். இவற்றைப் பாதுகாப்பதற்கு மக்களின் கடமையும் பொறுப்புமாகும். எனவே இந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வழமையான தேர்தல்களைப் போன்றல்லாமல் இம்முறை பாராளுமன்றத் தேர்தல் புதியதொரு வழமையான சூழலிலிலேயே நடைபெறவுள்ளது. எனவே அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றார்.