(செ.தேன்மொழி)

யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக பெருமைக்கொள்ளும் அரசாங்கம், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாக்க முயற்சிக்காமல், தங்களது பலத்தை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களிலே  சாக்ஸ், எச்.வன் என்.வன் போன்ற தொற்று நோய்கள் வெளிநாடுகளில் பரவியிருந்த போதிலும் இலங்கைக்குள் அவற்றின் தாக்கம் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. மலேரியாவையும் வெற்றிக் கண்டுள்ளேம். இந்நிலையில் இலங்கை ஒரு தீவு என்ற வகையில் விமான நிலையத்தின் ஊடாகவே வைரஸ் பரவல் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய பாதுகாப்பு விதிகளை செயற்படுத்திருந்தால். வைரஸ் நாட்டுக்குள் வந்திருக்காது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் நாங்கள் எச்சரிக்கை விடுத்து வந்த போதில் அமைதிகாத்து வந்த அரசாங்கம், வைரஸ் நாட்டுக்குள் வந்ததன் பின்னரே நாட்டை முடக்கி வைக்க தீர்மானித்தது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போதிலும் நாடு திறந்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வைரசுக்கா அஞ்சி நாட்டை முடக்கடுடியாது என்றார்கள். யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறியே இவர்கள் பெருமைக்கொண்டு வருகின்றனர். மாபெரும் யுத்தமொன்றை வெற்றிக் கொண்டதாகவே இவர்கள் எண்ணியுள்ளனர்.

இலங்கை போன்ற ஏனைய தீவு நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரைஸ் பரவாதவகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து தடுத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் முறையற்ற  செயற்பாடுகளினாலேயே இன்று வைரஸ் நாட்டுக்குள் வந்துள்ளது. நான் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் 159 அவசர சிகிச்சை பிரிவுகளை அமைத்திருந்தேன். 'சுவசெரிய ' அம்புலன்ஸ்களை சேவையில் ஈடுப்படுத்தினோம். நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த போது இந்த அம்புலன்ஸ்களே நோயாளர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றன.

அரசாங்கத்திற்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் தங்களது பலத்தை தக்கவைத்துக் கொள்வதிலேயே அக்கறை இருக்கின்றது.மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விரைவில் தேர்தலுக்கான திகதியை குறிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தார்கள். தற்போதும் அதே எண்ணத்தில் சுகாதார பிரிவினரும் , வைத்தியர்களும் வழங்கும் ஆலைசனையை பின்பற்றமல் செயற்பட்டு வருகின்றார்கள்.

இலங்கையில் வைத்திய நிபுணர்கள் இருவர் இருந்தும் . ஒருவரிடம் மாத்திரமே அரசாங்கம் ஆலோசனை பெற்றுக் கொள்கின்றது. மற்றவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். தேர்தலை புறந்தள்ளிவிட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இதற்கு முதலிடத்தை வழங்கி செயற்பட வேண்டும்.