(செ.தேன்மொழி)

கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்படுவதுடன், அனைத்து இனமக்களும் சமமாகவும் , பாதுகாப்புடனும் வாழக்கூடிய நிலைமையை கொழும்பில் ஏற்படுத்துவோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில்பிரேம ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு - சங்கராம மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொதுத் தேர்தலிலே எமக்கு ஆதரவினை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினர் எம்முடன் இணைந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொழும்புவாழ் தமிழ்பேசும் மக்களுக்காக அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொடுக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். கடந்த காலங்களிலும் தமிழ் மக்களின் நலனுக்காக  பல்வேறு சேவைகளை செய்துள்ளதுடன் , எதிர்வரும் காலத்தில் இதனைவிட அதிகமான சேவைகளை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

எமது ஆட்சியில் கொழும்பில் வீட்டுரிமையின்றி வாழும் மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையங்கள் , சுய கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களின் வர்த்தக நடவடிக்கையை முன்னேற்றுதல் , இனைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் , கல்வித்துறையை முன்னேற்றுதல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

கொழும்பு மாவட்டத்தில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்ற போதிலும் சிங்களமொழி பேசும் வேட்பாளர் என்ற வகையில் , எனது வேலைத்திட்டத்தை தமிழ்பேசும் மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் மொழிக்கு மதிப்பளித்து தமிழ் மொழியிலும் அச்சிட்டு வழங்கி வருகின்றேன் என்றார்.