வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் குலரட்ணம் விக்னேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க கூடிய வகையில் ஏனைய இனங்களுக்கு கிடைக்கின்ற அதே கௌரவமும் அதே சமனான நீதியும் கிடைக்க கூடிய வகையில் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதே என்னுடைய மற்றும் என் கட்சியினுடைய தீர்மானமும் ஆகும்.

தமிழர் பிரதேசங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய இடங்களாக காணப்படுகின்றது.

நாங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாமல் இருந்து வருகின்றமையால் எமது பிரதேசத்தில் கல்வி மிகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை ஓர் காரணமாக அமையலாம். 

குறிப்பாக நான் ஒரு கல்வித்துறை சார்ந்தவன் என்கின்ற வகையில் தற்சமயம் குடும்ங்களில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் உடல் உள ரீதியான பாதிப்புக்களே அவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளமையினை என்னால் உணர முடிகின்றது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளின் முடிவுகள் வெளியாகும் போது வடபகுதி பத்திரிகைகளின் தலைப்பாக " வடக்கினுடைய கல்வி நிலைமை வீழ்ச்சி "  என்கின்ற செய்தி காணப்படும் அதே நேரம் அடுத்த நாள் பத்திரிகையில் " அரசியல் தலைமைகள் இது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர் " என்கின்ற செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கின்றது.

உண்மையில் இந்த பிரச்சினையின் அடிப்படையினை கண்டறிந்து அதற்குரிய தீர்வினை பெற்றுத்தாராமல் வெறும் கருத்துக்களை மட்டும் வெளியிடுவது  எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்த மாட்டது என்பதனை அவர்கள் உணர்வதில்லை.

என்னுடைய அவதானிப்பில் கல்வி வீழ்ச்சிக்குரிய முக்கியமான காரணங்களில் ஒன்று ஏற்கனவே குறிப்பிட்டது போல வடபகுதியின் பொருளாதார பின்னடைவே முக்கியமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு,   வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியின்மையே ஆகும்.

ஆகவே எங்கள் உழைப்பினூடாக பிரதேசத்திலே தன்னிறைவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே என்னுடைய திட்டமாகும். இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனவே இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக முதலில் ஓர் தொழிற்துறை அபிவிருத்தி மாற்றும் பொருளாதார வளர்ச்சியை எமது வடபகுதி காண வேண்டுமென்றால் உண்மையில் வடபகுதிக்கென பொருளாதாரக் கொள்கை ஒன்றினை வகுக்க வேண்டும். 

ஏனென்றால் நம் மண்ணிலே முதலிடுவதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றார்கள். இம் முதலீட்டாளர்களுக்கு ஏதுவானதொரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக எம் பிரதேசத்தில் இருக்கின்ற உள்ளூர் முதலீட்டாளர்கள் முக்கியப்படுத்தப்பட வேண்டும். 

அவர்களுக்குரிய ஊக்குவிப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் தேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் எம்பிரதேசத்தில் முதலிட விரும்புவர்கள் இங்கு வந்து முதலிடக்கூடிய சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

நான் கட்சியினூடாக முன்வைத்திருக்கும் விடயம் "வடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும்" என்பதாகும். அந்த பொருளாதாரக் கொள்கையானது தேசிய பொருளாதாரக் கொள்கைக்கு வலுவூட்டுவதாகவும், வடக்கினுடைய தனித்துவம் மற்றும் வளங்களை பாதுகாப்பதாகவும் அவ்வளங்களினூடு உச்ச பயனை அடைய வேண்டும் என்பதுமே எனது விருப்பமாகவும் திட்டமாகவும் உள்ளது என்றார்.