மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளும்பீல்ட், பிரவுன்ஸ்விக் தோட்டங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் மக்கள் மிகவும் அச்சம் மிகுந்த சூழலுக்குள் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

புளும்பீல்ட் தோட்டத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 12 ஆம் திகதி அதிகாலையும் சம்பவம் பதிவாகியுள்ளது. 

அதன்படி குறித்த நேரத்தில் தொடர்ச்சியாக லயன் குடியிருப்புகளிலுள்ள ஆறு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 5:30 வரையே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொள்ளைக்காரர்கள் முதலில் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டித்துவிட்டு, வீடுகளுக்குள் உள்நுழைகின்றனர். கொள்ளையர்களால் பெறுமதியான பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் கொள்ளையர்கள் வருவதும் பொருட்களை களவாடுவதும் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தவோ, சத்தமிடவோ முடியாதவாறான நிலைமையொன்று அவர்களுக்கு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். 

கொள்ளையர்கள் மிக உயரமாகவும் கறுப்பு நிறத்தில் காணப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் மிகவும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் அப்பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருப்பினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்களாக பெருந்தோட்ட மக்கள் காணப்படும் நிலையில் அவர்களை மேலும் நலிவுபடுத்துவதாக இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.