சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் 'டாக்டர்' படத்தின் சிங்கிள் ட்ரெக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'ஹீரோ' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'டாக்டர்'. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் தெலுங்கு நடிகை பிரியங்கா அருள் மோகன் ஜோடியாக அறிமுகமாகிறார். 

இவர்களுடன் யோகிபாபு, வினய், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் நீண்டநாள் நண்பரும்,' கோலமாவு கோகிலா' என்ற படத்தின் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார். 

இதனை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்திற்காக, சிவகார்த்திகேயனின் சொந்த பட நிறுவனம் தயாரிக்கிறது.

எதிர்நீச்சல், மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் 'டாக்டர்' படத்தில் இடம்பெற்ற 'செல்லமே...' எனத்தொடங்கும் முதல் பாடல், இம்மாதம் 16ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், அனிருத்தின் ரசிகர்களும் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.