தென்னிலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பயனில்லை : ரெலோ தலைவர் செல்வம் செவ்வி

13 Jul, 2020 | 09:38 PM
image

(நேர்காணல்: ஆர்.ராம்)

ராஜபக்ஷவினருடன் எட்டமாத கால பேச்சுக்களை முன்னெடுத்திருக்கின்றோம். ரணில்-மைத்திரி அரசுடன் நான்கரை வருடங்கள் பயணித்திருக்கின்றோம். இக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க இயலுமையற்ற நிலையில் தென்னிலங்கை இருக்கின்ற நிலையில் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பயனில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட தலைமை வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- வன்னித் தேர்தல் களத்தில் தமித் தேசிய சிந்தனையுடைய கட்சிகள் இம்முறை புதிதாக களமிறங்கியுள்ளமை நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதா?

பதில்:- வன்னிதேர்தல் மாவட்டத்தில் 6பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகள் 28சுயேட்சைக் குழுக்களை உள்ளடக்கிய 405பேர் தேர்தல் களத்தில் உள்ளார்கள். இதனால் எமது மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனினும் இவ்வாறு களமிறங்கி உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும்  வெவ்வேறுபட்ட நோக்கமும் பின்னணியும் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் மக்கள் இறுதி நேரத்தில் குழப்பங்களை தவிர்த்து தெளிவான தீர்மானமெடுக்கின்றபோது அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வேறெந்த தெரிவும் இருக்கப்போவதில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எனினும் வழமைக்கு மாறாக இம்முறை தேர்தல்களம் பலதரப்பின் ஊடுருவலால் கூட்டமைப்புக்கு சவலாக மாறியுள்ளது.

கேள்வி:- கடந்த ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணித்த கூட்டமைப்பால் அரசியலுரிமைகளையோ, அபிவிருத்திகளையோ வென்றெடுக்க முடிந்திருக்கவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- முப்பது வருட ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் ஜனநாயரீதியிலான இராஜதந்திரப் போராட்டத்தினையே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டிய நிலைமை கடந்த பத்துவருடங்களாக இருக்கின்றது.  இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்று இரண்டு பிரதான கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சியைப் பொறுப்பேற்றன. இந்தக்காலத்தில் நாங்கள் அரசாங்கத்தின் முற்போக்கான செயற்பாடுகளுக்கு இயன்றளவு ஆதரவினை வழங்கியிருக்கின்றோம்.

குறிப்பாக 19ஆவது திருத்தச்சட்டம், புதிய அரசியலமைப்பு விடயங்கள் எமது கணிசமான பங்களிப்புக்கள் இருந்தன. புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடைக்கால அறிக்கை வரையில் நீடித்திருக்கின்றன. பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் அந்தப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

இந்தநிலையில் 70வருடப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தென்னிலங்கையிடமிருந்து தீர்வினைப் பெற்றுவிடமுடியாது. அவ்வாறு வழங்கும் மனநிலையிலும் தென்னிலங்கை தரப்புக்கள் இல்லை.

மேலும் இனப்பிரச்சினை தீர்வுக்காக ஆட்சியாளர்களுடன நாம் செல்லக்கூடிய அதியுச்சமான நிலைவரை சென்றும் அதில் வெற்றிபெறமுடியாத சூழல் காணப்படுவதை ஆதரத்துடன் நிரூபித்துள்ளோம். ஆகவே .நா மன்று முதல் சர்வதேச தரப்பிடத்தில் எமது நியாயப்பாட்டை முன்வைக்கும் திரணியைப் பெற்றிருக்கின்றோம்.

கேள்வி:-தேர்தலின் பின்னர் ஆளும் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- போர் நிறைவடைந்த பின்னரான காலத்தில் ராஜபக்ஷவினருடன் எட்டுமாத காலங்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். அப்போது 13பிளஸ் என்று மஹிந்த கூறினார். ஆனாலும் தீர்வுக்கான சாத்தியமான சிறு சமிக்ஞை கூட கிடைத்திருக்கவில்லை. தற்போது 13 மாற்றவேண்டுமென்கிறார். 19 ஒழிக்க வேண்டுமென்கிறார்.

மேலும் மைத்திரி- ரணில் கூட்டரசில் நான்கரை வருடங்கள் அரசியல் தீர்வுக்காக ஒத்துழைப்புக்களை நல்கியிருந்தோம். ஆனால் தென்னிலங்கை தலைவர்கள் எவரும் நியாயமான தீர்வினை வழங்குவதற்கு தயாரில்லை. ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தும் மனோநிலையில் கூட இல்லை. இந்த நிலையில் ஆட்சியாளர்கள் தீர்வினை வழங்குவார்கள்.

அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது பெருத்தமற்றதொன்றாகும். மேலும் தென்னிலங்கை தலைவர்களுடன் தொடர்ந்தும் பேசுவதால் எந்தவிதமான பயனுமில்லை. அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எம்முன்னுள்ள இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்பின் ஊடாகவே நகர்வுகளைச் செய்யவேண்டியுள்ளது.

 கேள்வி:- பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை அவசியமென்று பாதிக்கப்பட்ட தரப்புக்கள் வலியுறுத்தி நிற்கையில் இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பினுள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றவே?

பதில்:-போரின் பின்னரான சூழலில் போர்க்காலத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் எமது மக்களிடத்திலிருந்து .நா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களால் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, விதிமுறைகளை மீறிய போர்ச்செயற்பாடுகள், தடைசெய்யப்பட்ட ஆயுதப்பயன்பாடு, மக்களின் இழப்புக்கள், பாதிப்புக்கள் தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அந்த விசாரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தினை வழங்கும் வகையில் ஒரு சர்வதேச விசாரணையாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது.

ஏற்கனவே சர்வதேச விசாரணை நடைபெற்று விட்டதென்றால் குற்றவாளிகள் யார்? அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன? அந்த விசாரணையில் இலங்கை அரசாங்கத்தின் வகிபாகம் என்ன? இவ்வாறு கேள்விகள் எழுகின்றன. இலங்கை அரசாங்கத்திடமே சர்தேச ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொறுப்புக்கூறல் செய்விக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

கேள்வி:- கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியாக இருக்கும் உங்கள் தரப்பின் பிரதிநிதிகள் தமிழரசுக்கட்சியை பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சிக்கின்றார்களே?

பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபக கட்சிகளில் ஒன்றாம் நாம் அதன் ஒற்றுமையை மையப்படுத்தியே செயற்பட்டு வந்திருக்கின்றோம். ஆனால் எம்மைப்பற்றி தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைப்பதால் அவை தொடர்பாக தெளிவுபடுத்தி பதிலளிப்புக்களையே வெளிப்படைத்தன்மையுடன் செய்து வருகின்றோம். இது தமிழரசுக்கட்சியை இலக்குவைத்த செயற்பாடொன்றல்ல.

மேலும் அரசியல் தீர்வு, விடுதலைப்போராட்டம் உள்ளிட்ட பொதுப்படையான விடயங்களில் எமது நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்த வேண்டிய கடமை எமக்குள்ளது. விடுதலைக்கான பயணத்தில் பல்வேறு வலிகளையும், இழப்புக்களையும் சந்தித்த உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் எமக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

கேள்வி:- தமிழரச்கட்சி மீதான உங்கள் தரப்பு விமர்சனங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய இரண்டு கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுடன் ஏறக்குறைய ஒத்த தன்மையுடைனவாக உள்ளதே?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூட்டுக்குடும்பம் போன்றது. இதனுள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஜனநாயக கட்டமைப்பில் இந்த விடயங்கள் வழமையானவையே. அவ்வாறிருக்கையில் பிரச்சினைகளுக்கு கூட்டமைப்பினுள் இருந்தே தீர்வுகளை பெற விளைந்திருக்கவேண்டும். அவர்கள் வெளியேறிச் சென்றமை அத்தரப்புக்களின் இயலாமையினையே காண்பிக்கின்றது.

மேலும் புனிதப்போரின் தியாகத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அத்தகைய கட்டமைப்பினை தனியொரு தரப்பிடத்தில் தாரைவார்க்க முடியாது. கூட்டமைப்பின் உரித்தினை தனியொரு கட்சியினர் மட்டும் செந்தங்கொண்டாடுவதற்கு இடமளிக்க முடியாது. ரெலோ கூட்டமைப்பின் உள்ளிருந்தே தொடர்ந்தும் போராடும்.

 

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும்...

2025-01-25 17:23:37
news-image

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத்...

2025-01-25 19:08:44
news-image

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து...

2025-01-25 19:07:42
news-image

ஊழல், மோசடி விசாரணை கோப்புக்கள் மீளத்...

2025-01-25 17:35:45
news-image

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள்...

2025-01-25 17:29:59
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்...

2025-01-25 21:57:28
news-image

துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை...

2025-01-25 17:16:14
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு செல்லப்பிராணிகளை குறைகூறுவது வெட்கக்கேடான...

2025-01-25 19:05:39
news-image

மோசடியாளர்களை கைது செய்யும்போது அரசியல் பழிவாங்கல்...

2025-01-25 17:11:05
news-image

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு...

2025-01-25 17:28:34
news-image

இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் பற்றிய...

2025-01-25 17:20:58
news-image

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட...

2025-01-25 17:12:59