(நேர்காணல்: ஆர்.ராம்)
சிங்கள, பௌத்த பேரினவாத சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன் தீர்வளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது என்று தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும், வன்னிமாவட்ட தலைமை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி வன்னியில் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மக்களின் மனோநிலை எவ்வாறுள்ளதெனக் கருதுகின்றது?
பதில்:- போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளாகிவிட்டபோதும் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடத்தில் இருக்கின்றது. அதுமட்டுமன்றி தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, இழப்புக்களுக்கு நீதி நிவரணம் கிட்டவில்லை என்ற கோபம் இருக்கின்றது. கடந்த காலத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் கூட்டமைப்புக்கு வாக்குகளை வழங்கி ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற மனோநிலையில் உள்ளார்கள்.
கேள்வி:- இத்தகைய மனத்தாங்கலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உங்களது தரப்பின் பிரதிபலிப்புக்கள் என்னவாகவுள்ளன?
பதில்:- மக்களிடத்தில் நாம் யதார்த்த பூர்வமாக விடயங்களை எடுத்துரைத்து வருகின்றோம். நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள எமது கூட்டணியின் நோக்கங்கள், எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவு படுத்திவருகின்றோம்.
எமது புதிய கூட்டணியானது விட்டுக்கொடுப்பற்ற கொள்கையுடன் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது. தமிழர் தாயகத்தில் ஒருமுகத்தினையும், தென்னிலங்கை சிங்களத் தலைமைகளிடத்தில் இன்னொரு முகத்தினையும் காட்டுவது எமது நோக்கம் அல்ல என்பதை உறுதிபடக் கூறிவருகின்றோம். மேலும் வன்னி மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கு மக்கள் வழங்கும் ஆணைக்கு கட்டுப்பட்டு நேர்மையான சரணாகதியற்ற தமிழ்த் தேசிய அரசியலையே முன்னெடுக்கவுள்ளோம்.
கேள்வி:- அரசியலுரிமைகள், நீதிக்கோரிக்கைகள் என்பதற்கு அப்பால் போரின் வடுக்களாக இருக்கும் வன்னி வாழ் மக்களின் வாழ்வாதர அபிவிருத்தி தொடர்பில் தாங்களிடத்தில் எவ்விதமான திட்ட முன்மொழிவுகள் உள்ளன?
பதில்:- வன்னி மாவட்ட மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங்கொடுத்தவர்கள். கடந்த காலங்களில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் முதல் பொறுப்புக்கூறல் வரையில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அவை நிறைவேற்றப்படவில்லை. நாம் எத்தனையோ தடவைகள் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அப்பாவி மக்களின் ஆணையுடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்தபோதும் நிலைமைகள் எல்லைமீறிச் சென்றமையால் அதிலிருந்து வெளியேறத் தலைப்பட்டோம்.
ஆகவே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களின் வாழ்வாதரத்தினை உயர்த்துதல், எமது பகுதிகளை அபிவிருத்தி நோக்கி நகர்த்துதல் போன்ற விடயப்பரப்புக்களையும் உள்ளீர்த்துள்ளோம். இதனைவிடவும் வன்னி தொகுதி தொடர்பில் எமது வேட்பாளர்கள் அணி ஒன்றிணைந்து வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி செயற்றி;ட்டங்களை தயாரித்துள்ளது.
வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழும் ஒவ்வொரு பொதுமகனையும் பங்காளாரக்கொண்டு இந்த மண்ணிலிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி சுயசார்பு பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதை மையப்படுத்திய திட்டங்களை வகுத்துள்ளோம்.
அந்த விடயங்களை நாம் மக்கள் மத்தியிலும் தெளிவுபடுத்திவருகின்றோம். அவர்கள் அதற்கான அங்கீகாரத்தினை வழங்கவார்கள். அவ்வாறு வழங்குகின்றபோது எமது முன்மொழிவுகள் செயல்வடிவம் பெறும் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
கேள்வி:- வன்னித் தேர்தல் களத்தில் உங்களது அணிக்கு சவாலான அணியாக எதனைக் கருதுகின்றீர்கள்?
பதில்:- எமக்கு சாவாலாக நாம் யாரையும் நோக்கவில்லை. நாம் மக்களை மையப்படுத்திய அரசியலையே முன்னெடுக்கின்றோம். ஏமாற்று வாக்குறுதிகளைக் வழங்கும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பவர்களையும், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை சிதைப்பதற்காக களமிறங்கியுள்ள முகவர்களையும் எவ்வாறு எமக்கு சவாலாக கொள்ள முடியும். இவர்கள் மக்களாலேயே தேர்தல் முடிவில் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுவார்கள்.
கேள்வி:- தேர்தலின் பின்னர் ஆட்சியில் அமரும் தென்னிலங்கை தரப்புடன் உங்களது அணி பேச்சுக்களை முன்னெடுக்குமா?
பதில்:- எம்மால் கூட்டமைப்பு போன்று அரசியல் ஆதாயத்திற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று தற்போதே கூறமுடியாது. தென்னிலங்கையில் தற்போதைய ஆட்சியாளர்கள் 13ஆவது, 19ஆவது திருத்தச்சட்டங்களை ஒழிப்பதற்கு ஆணைகோரி நிற்கின்றார்கள். அந்த ஆணை கிடைத்தவுடன் அரசியலமைப்பை மாற்றவுள்ளனர். அந்த செயற்பாட்டிற்கா கூட்டமைப்பு ஆதரவளிக்கவுள்ளது என்பதே கேள்வியாகின்றது.
அதேநேரம் தென்னிலங்கையில் தற்போது சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் வெகுவாக தலைதூக்கியுள்ளது. அதுமட்டுமன்றி ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து ஏழு மாதங்களிலேயே ராஜபக்ஷவினரின் எதிர்காலத் திட்டங்கள் அம்பலமாகிவிட்டன. அவ்வாறான நிலையில் இந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வினை வழங்க முன்வருவார்கள் என்று சிந்திப்பதே முட்டாளத்தனமானது.
எம்மைப்பொறுத்தவரையில் அரசியல் தீர்வு விடயத்தில் தென்னிலங்கை தரப்புக்கள் இதயசுத்தியோடு பேசுவதற்கு முன்வந்தால் அல்லது மூன்றாம் தரப்பின் பிரசன்னத்துடன் வாக்குறுதிகள் வழங்கும் பட்சத்தில் அதுபற்றி பரிசீலிப்போம். ஆனால் எமது மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து எள்ளளவு விட்டுக்கொடுப்பிற்கு இடமிருக்காது.
கேள்வி:- உங்கள் தரப்பு முன்வைக்கும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று சாத்தியமாகுமா?
பதில்:- தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமாகவிருந்தால் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு இணைந்திருந்தது. தற்போது தமிழர்களின் பூர்வமாகவிருக்கும் வடகிழக்கில் வரலாற்றை மாற்றி நிரந்தரமாக பிரிப்பதற்காகவே தொல்பொருளை பாதுகாப்பதென்றுகூறி கிழக்கு மாகாணத்திற்கு செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு கிழக்கில் தமிழர் இருப்பின் உறுதிப்பாடே இந்தியாவின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்பது பிராந்திய மூலோபாய கணிப்பாகவும் உள்ளது. எனவே தமிழர்கள் விடயத்தில் இந்தியா தார்மீக கடமையை கொண்டிருக்கின்றது. அத்துடன் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் போன்று தென்னிந்தியாவிலும் நிலைமைகள் மோசமடைவதை தவிர்ப்பதற்கு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது. ஆகவே தமிழர்களுக்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுப்பதிலிருந்து இந்தியா விலகி நிற்கமுடியாது.
கேள்வி:-பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமது சுயலாப அரசியலுக்காக அநீதி இழைத்தவர்களை சர்வதேசத்தில் பிணையெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதற்காக கால அவகாசங்களை வழங்கியவர்கள் கூட்டமைப்பினரே. குறிப்பாக சுமந்திரன் சர்வதேச விசாரணை நிறைவடைந்ததாக கூறிவிட்டு தற்போதைய தேர்தல்காலச் சூழலில் உள்ளக விசாரணைகளை ஏற்கமுடியாது என்று கூவித்திரிகின்றார்.
போரில் நிகழ்ந்த சம்பவங்களுக்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக புலம்பெயர் தரப்புக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டள்ளார்கள். அச்செயற்பாட்டினை வலுப்படுத்த வேண்டியது அவிசியமாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM