(நேர்காணல்:- ஆர்.ராம்)

கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.

அச்செவ்வியின்முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடாக அரசியல் பயணத்தினை ஆரம்பித்த நீங்கள் பின்னர் தமிழ் மக்கள் இணையத்தினை உருவாக்கியிருந்த நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றீர்களே?

பதில்:- நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கொழும்பு வந்திருந்தபோது கணிதபாடக் கல்வியைபோதிக்கும் சமூக சேவையை ஆரம்பித்தேன். அதற்கான அங்கீகாரமாக லயன்ஸ் கழக தலைமைப்பதவி கிடைத்தது. அதன் பின்னர் வினைத்திறனான தலைமைத்துவ செயற்பாடு என்னை அடுத்த கட்டமாக அரசியலுக்குள் அழைத்து வந்தது. மாநகர சபை உறுப்பினராக, மாகாண சபை உறுப்பிராக தொடர்ந்த எனது பயணம் தற்போது பாராளுமன்றத்தினை மையப்படுத்தியிருக்கின்றது.

இலங்கையின் தேசிய கட்சிகள் அனைத்துமே விமர்சனத்திற்கு உட்பட்டவையாக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரை ஆதரிப்பதாகவே இருக்கின்றது. தற்போதைய சூழலில் அக்கட்சியிலிருந்து சிறுகுழுவொன்று வெளியேறிவிட்டது. இதனால் மேலாதிக்கச் சிந்தனைகள் அற்ற இளம் அங்கத்தவர்களைக் கொண்டு புதியதொரு பயணத்தினை அக்கட்சி ஆரம்பித்துள்ளது.

அந்தப்பயணத்தில் எனக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் தலைநகர் கொழும்பைப் பொறுத்தவரையில் ஐ.தே.க.வே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை என்றும் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றது. கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற சுயலாபமற்ற நோக்கிலேயே அக்கட்சியுடனான எனது பயணம் ஆரம்பித்துள்ளது.

கேள்வி:- கடந்த ஆட்சியின் பிரதான கட்சியாகவிருக்கும் ஐ.தே.க மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் கிடைக்குமென்று கருதுகின்றீர்களா?

பதில்:- கடந்த ஆட்சியில் குறைபாடுகள் சில இருந்தாலும், அவற்றுக்கு ஐ.தே.கவே முற்றுமுழுதாக பொறுப்புடையது என்று கூறமுடியாது. மேலும் கடந்த ஆட்சியில் குறைபாடுகளை ஏற்படுத்தியவர்கள் எவரும் தற்போது கட்சியில் இல்லை. புதிய முற்போக்கு மற்றும் எதிர்கால சிந்தனையுடையவர்கள் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையில் ஐ.தே.க.வில் பலர் மாற்றத்தினை எதிர்பார்த்திருந்தாலும் தற்போதே அது நிகழ்ந்திருக்கின்றது.

இதனைவிடவும் வடக்கு கிழக்கு மலையகத்திற்கு அப்பால் கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தினை ஐ.தே.க.வே உறுதிப்படுத்தி வந்திருக்கின்றது. 2004ஆம் ஆண்டிலிருந்தான தேர்தல் முடிவுகள் இதற்கு சான்றாக இருக்கின்றன. ஆகவே இம்முறையும் ஐ.தே.க.தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தினை நிச்சயமாக வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

கேள்வி:- ஐ.தே.க.விலிருந்து சிறுகுழுவொன்று பிரிந்து சென்றிருப்பதாக நீங்கள் கூறினாலும் சிறுபான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்கள் அக்குழுவில் அதிகமாக உள்ளனவல்லவா?

பதில்:- அந்தக்குழுவில் இருக்கும் சிறுபான்மைதரப்பினர் தமக்குள்ள மக்கள் செல்வாக்கால் வெற்றிபெற்றதாக தவறான சுயகணிப்பைச் செய்துகொண்டுள்ளார்கள். உண்மையில் பாரம்பரிய கட்சியான ஐ.தே.க.விற்கே வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. யானை சின்னத்தினையே மக்கள் அங்கீகரித்துள்ளார்கள். இவ்வாறு நிலைமை இருக்கையில் 2025இல் நாட்டின் தலைமைப்பொறுப்பொன்றில் அமர்வதற்கான கனவைக் கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்கவின் வலையில் தற்போது அனைவரும் சிக்கிவிட்டார்கள் என்பதே யதார்த்தமான விடயமாகும். இதிலிருந்து அவர்களால் மீள முடியாத நிலைமையில் இப்போதுள்ளார்கள். அந்தக்குழுவில் உள்ள எந்த சிறுபான்மை தலைவராவது அடுத்த ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளுக்கு சம்பிக்க ரணவக்க போட்டியிடமாட்டார் என்று உறுதியாகக் கூறும் திராணி இருக்கின்றதா?

கேள்வி:- ஆனால் ஐ.தே.க.வும் கொழும்பில் உள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே உங்களைப்போன்றவர்களை பயன்படுத்த விளைகின்றது என்ற விமர்சனமும் இருக்கின்றதல்லவா?

பதில்:- இந்த விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே கொழும்பு மாவட்டத்தில் அடையாளத்தினை வழங்கியுள்ளது என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன். மேலும் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உபதலைவர் ரவிகருணாநாயக்க ஆகியோருடன் நான் கலந்துரையாடலை மேற்கொண்டபோது அவர்கள் கொழும்பில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தினை தெளிவாக பிரதிபலித்துள்ளார்கள். அதுமட்டுமன்றி அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கும் தயாராகவே இருக்கின்றார்கள்.

மேலும் நாட்டின் தற்போதைய போக்கு எதிர்காலத்தின் ஆபத்துக்களை கட்டியங்கூறுவதாக அமைந்திருக்கின்றது. ஆகவே தலைநகரில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான பிரதிநிதித்தவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகின்றது. இந்தப்புரிதல் கொழும்புவாழ் தமிழ் பேசும் மக்களிடத்தில் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் அதற்கான அங்கீகாரத்தினை நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- தேசியக் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகளால் கொழும்பு மாவட்டத்தில் வாக்குச் சிதறல்கள் ஏற்படும் நிலைமையொன்று உருவாகுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக கணிக்கப்படுகின்றதே?

பதில்:- தமது பிரதிநிதிகளாக யார் வரவேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஆகவே வாக்குச்சிதறல்கள் ஏற்படும் என்று கூறமுடியாது. தமிழ் பேசும் வேட்பாளர்கள் வெவ்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக களமிறங்கியுள்ளதால் கொழும்பு மாவட்ட தேர்தல் களத்தில் போட்டி அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் குழப்பமடையமாட்டார்கள். தெளிவான தமது தீர்மானத்தினை வெளிப்படுத்துவார்கள்.

கேள்வி:- கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களை மையப்படுத்தி நீங்கள் கொண்டிருக்கும் திட்டங்கள் என்னவாக இருக்கின்றன?

பதில்:- கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகளை மூன்றாக வகுத்துள்ளோம். முதலாவது வறுமை, இரண்டாவது உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதார, தொழில்வாய்ப்பின்மை, மூன்றாவது மொழி ரீதியான பிரச்சினை என்பன அவையாகின்றன.  அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் திரட்டப்பட்ட தகவல்களின் படி வறுமையில் காணப்படும் குடும்பங்களை முன்னேற்றுவற்காக வீட்டுக்கு ஒருவருக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் திட்டமொன்றை அமைத்துள்ளோம். இதன்மூலம் முதற்கட்டமாக 50சதவீதமான வறுமை ஒழிப்பினை எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற பிரச்சினைகளை கண்டறிந்து உரிய தீர்வளிப்பதோடு, மாகாண, தேசிய பாடசாலைகளில் காணப்படும் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்வதற்கு முயற்சிகளை எடுக்கவுள்ளோம். மேலும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் தெளிவூட்டல்களுடன் கூடிய கண்காணிப்பு நடவடிக்கையொன்றை முன்மொழிவதென்றும் முறைசாரா கல்வியின் ஊடாக தொழில்வாய்ப்புக்களைப் பெற்று வேலையற்றவர்ளின் எண்ணிக்கையை குறைப்பதும் இலக்காக உள்ளது.

அடுத்து கொழும்பில் வசிப்பவர்களும் சரி,வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களும் சரி மொழிரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றார்கள். இதற்காக இருமொழி பேசுபவர்களை திணைக்களங்களில் பணிக்கமர்த்துவதை உறுதிசெய்தல் மற்றும் மொழிக்கல்வியை ஊக்குவிப்பதற்காக அவிசாவளையில் ஆசிரியர் பயிற்சி வள நிலையத்தினை நிறுவுதல் ஆகிய திட்டங்களை கொண்டிருக்கின்றோம்.

இதனைவிடவும், அடிப்பட உரிமைகளை உறுதிப்படுத்துவதையும், பரந்துவாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அந்தந்த தரப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதென்பது எமது நிலைப்பாடாகவுள்ளது.