'காக்டெய்ல் ' என்ற படத்தில், நாயகனின் நண்பனாக நடித்த எம்மை, கதையின் நாயகனாக சித்தரித்து விளம்பரப்படுத்தி, எம்முடைய ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று கொமடி நடிகர் யோகி பாபு வேதனையுடன் புலம்பியிருக்கிறார்.

 இவர் நடிப்பில் தயாரான காக்டெய்ல் என்ற படத்தில் இவர் கதையின் நாயகனாக நடிப்பதாக முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த படம் ஜி5 டிஜிட்டல் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் அதிகளவில் பதிவிட்டனர்.

இதுகுறித்து யோகிபாபு விளக்கம் அளிக்கையில்' பல படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். சில படங்களில் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கதாநாயகனுக்கு நண்பனாக நட்புக்காக பத்து நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுக்கிறேன். ஆனால் நடித்து முடித்தவுடன் எம்மை கதையின் நாயகன் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

இதனால் படம் பார்க்க வருபவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். நான் கொமடி நடிகர் என்ற அடையாளத்துடன் தான் மக்களிடம் சென்றடைய விரும்புகிறேன். அதனை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து வழிகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். இதுபோன்ற பிரச்சனை எழுந்துள்ளதால் இனி நடிக்கும் படங்களில் கூடுதல் கவனமாக பணியாற்ற தீர்மானித்திருக்கிறேன்.' என்றார்.

இவர் தற்போது 12க்கும் மேற்பட்ட படங்களில் கொமடி நடிகராகவும், மூன்றுக்கு மேற்பட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கொமடி நடிகராக வலம் வரும் யோகிபாபு. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.