(நா.தனுஜா)

பொதுத்தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சட்டரீதியான அந்தஸ்த்தை வழங்கும் விதமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த சுகாதார நடைமுறைகளுக்கு சட்ட அந்தஸ்த்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அதனூடாகவே தொற்றுப்பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாட்டுமக்களைப் பாதுகாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தேசிய ரீதியான பேரழிவை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கோரிக்கை என்ற தலைப்பில் கரு ஜயசூரிய வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சுகாதார நிபுணர்களின் கருத்துக்களின்படி கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து மேலும் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இது ஒரு தேசிய ரீதியான பேரழிவாக மாறக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. இவ்வேளையில் இலங்கையர்கள் ஒவ்வொருவரும் தத்தமது சுயபாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக செயற்படுவது மிகவும் அவசியமானது என்பதை நினைவுபடுத்துவதோடு, உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் வேளையில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த சுகாதார நடைமுறைகள் இன்னமும் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படாமை விசனமளிக்கிறது. வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படாத பட்சத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றபடல் மற்றும் அமுல்படுத்தப்படல் ஆகியவை தொடர்பில் அரச அதிகாரிகளாலும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோராலும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கமுடியாது.

இந்நிலையில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கின்றார். தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் உயர் போட்டித்தன்மையுள்ள தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய கோரிக்கைகள் எவ்வித சட்டரீதியான மட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தாது. கடந்த சில வாரகாலங்களில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி பல அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தமையையும், அவற்றில் கலந்துகொண்டமையையும் காணக்கூடியதாக இருந்தது.

அரசியல்வாதிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகள் சுகாதார சேவையாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பை கீழ்நிலைக்குத் தள்ளுவதாகவே அமைந்திருப்பதோடு, கடந்த மூன்றுமாத காலமாகத் தன்னலம் பாராது சேவையாற்றிய அந்த ஊழியர்களைக் கேலிக்குட்படுத்துவதாகவும் இருக்கிறது.