தீர்மானத்தினையும் மீறி கிரவல் அகழ்வுப்பணி  ; அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

By T Yuwaraj

13 Jul, 2020 | 04:10 PM
image

வவுனியா கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராமமக்கள் தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக, நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

கிரவல் அகழ்வினால் பாரிய குழிகள் ஏற்படுவதாகவும் இதனால் குளத்திற்கான நீர்வரத்தில் தடை ஏற்பட்டுள்ளமையால் நெற்செய்கையினை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

குறித்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 29 ஆம் திகதி வவுனியா நிலவை அளவை சுரங்கப்பணியக அதிகாரி தலைமையில் செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உதவி விவசாய பணிப்பாளர் மற்றும், பொதுமக்களின் பங்கு பற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கிரவல் அகழ்வுப்பணி இடம்பெறும் பகுதி நீரேந்து பகுதியாக இருப்பதனால், குளத்திற்கு வருகின்ற நீரில் தடையேற்படுவதாக வெளிக்கள அறிக்கையூடாக தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் அகழ்வுப்பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் காலப்போக்கில் திணைக்களத்தின் தேர்ச்சிபெற்ற அதிகாரிகளின் பரிசீலணையின் பின்னர் அனுமதி கொடுப்பதனைபற்றி மீளாய்வு செய்யலாம் என குறித்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது .

எனினும் குறித்த தீர்மானத்தினை மீறி கடந்த முதலாம் திகதி எவ்வித முன் அறிவித்தலுமின்றி மீண்டும் கிரவல் அகழ்வுப்பணி ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் கமக்காரர் அமைப்பினர்

தமக்கு நிலையான ஒரு தீர்வினை வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேனவிடம்  மகஜர் ஒன்றினை இன்று கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரச அதிபர் ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களையும் அழைத்து கலந்துலரையாடியதுடன், கிரவல் அகழ்வுபணியினை இன்றிலிருந்து இடைநிறுத்துவதாக பொதுமக்களிற்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right