* தேசிய நலன் என்பது அந்தந்த நேரத்தில் பதவியிலிருக்கின்ற அரசாங்கத்தின் நம்பிக்கையையும் அபிப்பிராயத்தையும் அடிப்படையாகக் கொண்டது என உதாரணங்கள் வெளிக்காட்டுகின்றன. 

ஜூலை 3ஆம் திகதி லடாக்கில் இந்திய துருப்புகள் மத்தியில் நிகழ்த்திய உரையில் சீன விஸ்தரிப்பு வாதம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பகிரங்கமாகவும் ஒளிவுமறைவுயின்றியும் தெரிவித்த கருத்து அந்தக் குற்றச்சாட்டை அவசர அவசரமாக நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையை சீனர்களுக்கு ஏற்படுத்துகின்ற அளவுக்கு வெளிப்படையானதாக இருந்தது. குற்றச்சாட்டை நிராகரிக்கையில், சீனா விஸ்தரிப்புவாத போக்கை கடைபிடிக்கவில்லை என்பதற்கான சான்றாக அவர்களின் பேச்சாளர் சீனா அதன் அயல்நாடுகளில் இரு நாடுகளை தவிர ஏனையவற்றுடன் கைச்சாத்திட்ட எல்லை உடன்படிக்கைகளை கூறினார்.

‘சீனா அதன் 16 அயல்நாடுகளில் 12 நாடுகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளுடாக எல்லைகளை வரையறை செய்து நாடுகளுக்கிடையிலான தரை எல்லைகளை நட்புறவு ஒத்துழைப்பின் பிணைப்புகளாக மாற்றியிருக்கிறது’ என்று அந்த பேச்சாளர் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது

மோடி திட்டமிட்டு நன்கு சிந்தித்து நிகழ்த்திய அந்த உரை மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. அண்மைய வாரங்களில் லடாக்கின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு மாத்திரம்தான் சீனாவின் விஸ்தரிப்பு வாதத்தை அவர் புரிந்து கொண்டாரா? அல்லது நெடுகவுமே அத்தகைய சிந்தனையை கொண்டிருந்த அவர், அதை பகிரங்கமாக இப்போதுதான் கூறுவதற்கு தீர்மானித்தாரா? சீனாவின் ஜனாதிபதி சி ஜின்பிங்வுடன் கடந்த சில வருடங்களாக பல சந்திப்புகளை நடத்திய மோடி அவரை பற்றிய மதிப்பீட்டை நிச்சயம் கொண்டிருப்பார் என்று எம்மால் எதிர்பார்க்க முடியும்.

சீன விஸ்தரிப்பு வாதம் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சு பிரதமர் அலுவலகத்தில் நான் பணியாற்றிய காலத்தில் திருமதி இந்திரா காந்தி, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறிய ஒரு விடயத்தை நினைவு கொண்டு வந்தது. ‘எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் பாகிஸ்தானுடன் நாம் சுமுகமான சமாதானமான உறவுகளை  கொண்டிருக்கக்கூடிய ஒரு நேரம் குறித்து என்னால் நினைக்கமுடியும். ஆனால், சீனாவுடன் அது ஒருபோதும் சாத்தியமில்லை. ஏனென்றால் சீனா அடிப்படையில்  ஒரு விஸ்தரிப்புவாத சக்தி’ என்று அவர் சொன்னார்.

திருமதி இந்திரா காந்தி சோவியத் யூனியன் உட்பட வேறு சில நாடுகளை நம்பத் தயங்கியது போன்றே சீனாவையும் நம்பவில்லை. நிச்சயமாக அவர் பாகிஸ்தானை நம்பவில்லை. சர்வதேச உறவுகளை நம்பிக்கை என்ற ஒரு விடயம் இல்லை என்பதே வெளியுறவுக்கொள்கையில் அவரது அடிப்படை அணுகுமுறையாக இருந்தது எனலாம். அமெரிக்க ஜனாதிபதி ‘நம்பு ஆனால் உண்மையை உறுதிசெய் (Trust but verify) என்று கூறுவார். ஆனால் திருமதி இந்திரா காந்தியின் அணுகுமுறை ‘உண்மையை உறுதிசெய், அப்போதும் கூட நம்பாதே’ (verify and still not trust) என்பதாகவே தோன்றியது.

நேரு, சீனா  & காஷ்மீர்

மறுபுறத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியாவை சீனா தாக்காது என்று தனக்குள் நம்பிக்கை கொண்டிருந்தார். அத்தகைய ஒரு நம்பிக்கையை நேரு வளர்த்து கொள்வதற்கு அவரது பாதுகாப்பு அமைச்சரான வி.கே.கிருஸ்ணமேனன் பெரும் பங்களிப்பு செய்திருக்கக்கூடியது சாத்தியம். அவரது இந்த தவறான மதிப்பீடு குறித்து அவரது ஆலோசகர்கள் எவரும் எச்சரிக்கை செய்யவில்லை; அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளியுறவு விவகாரங்களில் அனுபவம் இருக்கவில்லை. எந்தவொரு கோட்பாட்டு அடிப்படையிலும் நேரு விடயத்தில் வழிநடத்தப்படவில்லை. ஆம், அவர் இந்தியாவை பற்றியும் உலக அரங்கில் தான் ஒரு பெரிய பாத்திரத்தை வகிப்புது குறித்தும் கனவு கண்டார். அந்த முயற்சியில் சீனா ஒரு பங்காளியாக இருக்கமுடியும் என்று நம்பினார்.

தற்போது அரசாங்கம் கூட இந்தியா ஒரு ‘விஸ்வகுரு’வாக செயற்படுகிறது என்றே நினைக்கிறது. அவரிடம் என்னதான் காரணங்கள் இருந்தாலும் சீனா தொடர்பான நேருவின் கொள்கை பாரியளவு தவறானது. நேருவை நேசிக்கின்ற நாம் எல்லோரும் (இந்திய தேசிய காங்கிரஸ் உட்பட) இதை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும். நேரு காஷ்மீரில் எந்தவொரு இமாலய தவறையும் இழைக்கவில்லை. 1949 ஜனவரியில் போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டபோது நேரு இயல்பாகவே ஒருபாலர் என்பதற்காகவோ ஐக்கிய நாடுகள் சபை அல்லது எந்தவொரு மற்றைய நாடும் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பாளர் என்று நாமகரணம் சூட்டி ஆக்கிரமிப்பை கைவிடுவதற்கு அந்த நாட்டை இணங்கவைக்கும் என்று நம்பியதாலோ அவர் அவ்வாறு செய்யவில்லை.

அந்த நேரத்தில் பிரிட்டன் இரண்டகதனமாக நடந்துகொண்டதை அவர் கண்டார். அத்துடன் காஷ்மீர் பிரச்சினையை பிரிட்டிஷ்காரர்களே கையாளட்டும் என்று அமெரிக்கா விரும்பியதே என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். அந்த நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடிய நிலையில் இந்திய இராணுவம் இல்லை என்பதே களத்தில் நிலவிய யதார்த்தமாக இருந்தது. அந்த நேரத்தில் அந்த பிரச்சினையில் பங்காற்றிய (சிரேஷ்ட இந்திய இராணுவ அதிகாரிகள் உட்பட) சகலரதும் பேட்டிகளை அவர்கள் எழுதியவற்றையும் முற்றுமுழுதாக ஆய்வு செய்த பிறகு பல வருடங்களுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட போர் பற்றிய உத்தியோகபூர்வ வரலாற்றிலும் மாத்திரமல்ல மதிப்புக்குரிய கல்விமான்கள் பலரினாலும் இந்திய இராணுவத்தின் அந்த நிலை தெளிவாக வெளிக்கொணரப்பட்டிருந்தது.

அதேவேளை, எந்தவொரு கோட்பாட்டு சார்பினாலும் நேரு செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் இடதுசாரியா என்பதும் எனக்கு தெரியாது. வெளியுறவுக் கொள்கையில் தேசிய நலன் என்பது ஒரு வழிகாட்டும் கோட்பாடு மாத்திரமே என்று நேரு உறுதியாக நம்பினாரா என்பதும் எனக்கு தெரியாது. இந்திய சுதந்திரத்துக்கு சில வாரங்களுக்கு முன்னதாக அல்பர்ட் என்சின் தனக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் எழுதிய நேரு வெளியுறவுக்கொள்கை அடிப்படையில் சுயநலமானதே என்று வர்ணிக்கின்றார். இந்தியாவின் நலன்கள் மேற்குலகிலேயே தங்கியிருக்கிறது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். இந்தியாவுக்கு தேவைப்பட்ட தொழில்நுட்பத்தையும் மற்றைய உதவிகளையும் அமெரிக்காவிடமிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பினார். இது விடயத்தில் சோவியத் யூனியனால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானுடன் இராணுவ உடன்படிக்கையை செய்து கொண்டு பெருமளவு ஆயுதங்களை வழங்கிய பின்னர் மாத்திரமே சோவியத் யூனியனை நோக்கத்தொடங்கினார் அவர். எந்தவொரு கோட்பாட்டு காரணியின் விளைவாக அல்ல தவறான கணிப்பீட்டு காரணமாகவே சீனா தொடர்பான அன்றைய இந்திய அணுகுமுறையின் தவறுகளும் பெரும் பிழைகளும் இழைக்கப்பட்டன.

பாகிஸ்தானை கையாளுதல்

போர்க் கைதிகளான பாகிஸ்தான் படையினர் நாடு திரும்ப அனுமதிக்கும்போது அதற்கு பிரதியுபகாரமாக திருமதி இந்திரா காந்தி எதையுமே கேட்காதபோது அவரையும் கூட இதேபோன்று அப்பாவியாக இருப்பதாகவும் கூடுதலாக நம்பிக்கை வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பிரதியுபகாரமாக அவர் என்ன செய்ய முடியும் என்று எவரும் கூறுவதாகவும் இல்லை. ஜம்மு-கா~;மீர் ஆக்கிரமித்திருக்கும் சகல பகுதிகளிலிருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று அவர் கேட்டிருக்க வேண்டுமா? எமது பிராந்தியத்தை பாகிஸ்தான் திருப்பித்தரும் வரை எமது நாட்டில் பாகிஸ்தான் போர்க்கைதிகளை எவ்வளவு காலத்துக்கு வைத்திருந்திருக்க வேண்டும்.

மீண்டும் சிம்லா விவகாரத்தில் போர் நிறுத்த எல்லைக்கோட்டை ஒரு சர்வதேச எல்லையாக மாற்றுவதாக பாகிஸ்தானின் சுல்பிகார் அலி பூட்டோ வாய்மூலம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று திருமதி காந்தி உண்மையில் நம்பினாரா? என்று உறுதியாக எவராலும் கூறமுடியவில்லை. பூட்டோ அத்தகைய உள்மொழியை வழங்கியிருந்தால் (அவ்வாறு அவர் வழங்கவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது) அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்;பட்டிருந்தால் இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டிருக்குமா?

இன்றைய ஆளுங்கட்சி அக்சாய்சின் பகுதியையும் கூட சீனாவிடமிருந்து மீட்டெடுக்க விரும்புகிறது. (எந்த விதிமுறையின் மூலம் மீட்டெடுப்பது என்று தெளிவுபடுத்தப்படவில்லை) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கோ அல்லது அக்சாய் சின்னுக்கோ உரிமை கோருவதை இந்தியா கைவிட வேண்டும் என்பது எவரது சிந்தனையாகவும் இல்லை; ஆனால் அந்த உரிமைக்கோரலை பகிரங்கமாக அதுவும் குறிப்பாக ஒரு பதற்றம் நிறைந்த சூழ்நிலையில் பகிரங்கமாக இந்த உரிமையை மீள வலியுறுத்துவது தான் பிரச்சினை. சகல வெளியுறவு கொள்கையுமே அடிப்படையில் உள்நாட்டு கொள்கைகளே என்றும் எல்லா காலத்திலும் எல்லா அரசாங்கங்களிலும் இதுவே உண்மை என்றும் கூறப்படுவதுண்டு.

மேற்கூறப்பட்ட விடயங்கள் சகலவற்றையும் இங்கு வெளிப்படுத்துவதன் நோக்கம் முன்னைய தலைமுறை தலைவர்களில் எவரையும் குற்றப்பொறுப்பிலிருந்து விடுவிப்பதல்ல. அவர்கள் இழைத்திருக்கக்கூடிய பெரும் தவறுகள் பெரும் பிழைகளுக்காக பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும். அந்தந்த காலகட்டத்தில் தங்களால் இயலக்கூடிய வகையில் தேசிய நலன் தொடர்பிலான தங்களது அபிப்பிராயத்தினதும் நம்பிக்கையினதும் பிரகாரம் அவர்கள் செயற்பட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பதவியிலிருக்கின்ற அரசாங்கமே தேசிய நலன் என்பதை அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற முறையில் தீர்மானிக்கிறது. அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட சிவில் அணு உடன்படிக்கை இந்தியாவின் நலன்களுக்கு பயனுடையது என்று ஒரு அரசாங்கம் முடிவுக்கு வரலாம்; வேறு கட்சிகளினால் அல்லது அதே கட்சியினாலும் கூட ஆட்சி செய்யப்படுகின்ற வேறு அரசாங்கம் இன்னொரு நேரத்தில் வேறுபட்ட சூழ்நிலைகளில் வேறுபட்ட விதமாக சிந்திக்கலாம். அதே தர்க்க நியாயத்தின்படி மோடியின் இந்தியாவின் வெளியுறவு கொள்ளை அணுகுமுறையில் புற சார்பான சிந்தனைகள் தனது சிந்தனையில் செல்வாக்கு செலுத்த நிச்சயமாக அனுமதிப்பதில்லை. எங்களது தேசிய நலன்களை மேம்படுத்துவதற்கு அவசியமானது என்று அவர் நம்புகின்ற அணுகுமுறையின் அடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கையை கையாள்கிறார். காலப்போக்கில் வரலாறு அதன் மதிப்பீட்டை அறிவிக்கும்.

(த இந்து)

சின்மயா ஆர் கரேகான் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதுவராகவும் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் மேற்காசியாவுக்கான விசேட தூதுவராகவும் பணியாற்றியவர்)