(செ.தேன்மொழி)

அரசியலமைப்பு  ஊடாக இராணுவ நிர்வாக கட்டமைப்பை  உருவாக்குவதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பெரும்பான்மை ஆதரவை இதற்காக பெற்றுத்தருமாறு பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையானது பெரும் அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க , இது போன்ற பிரசாரங்களை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , எமது 50 சதவீதமான தேர்தல் பிரசாரங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதேவேளை தேர்தல் செயற்பாடுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளை இன்னமும் வர்தமானியில் வெளியிட வில்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார். ஏன் இந்த வர்த்தமானியை வெளியிடாமல் காலங்கடத்தி வருகின்றார்கள் என்று எமக்கு விளக்கமில்லை.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளால் மாத்திரமே நாட்டில் ஆட்சியமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அதனால் இந்த இரு கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களுக்கு வாக்களிக்காதவர்களை ஆளும் தரப்பினருக்கு வாக்களிக்குமாறே கோரிக்கை விடுத்துள்ளார். இதனூடாகவே ஐ.தே.க.வுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்த அரசியல் முறையை தெரிந்துங்கொள்ள முடிகின்றது.

ஜ.தே.க.வின் பொதுத் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் , தங்களது கட்சியின் நிறமான பச்சை நிறத்தை ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். சட்டதரணியான அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் , கட்சிகளுக்கென்று வேவ்வேறு வகையான நிறங்களை வேறுப்படுத்தப்பட்டு இல்லை என்பதை அறியாது இருப்பது பெரும் வியப்பாகும். இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே இவ்வாறான வேண்டுகொள்களை விடுத்து வருகின்றார்கள். இதேவேளை தங்களது இதயங்களில் பச்சை நிறத்தை பதியவைத்துக் கொண்டுள்ள அனைவரும் எம்முடனே இணைந்துக் கொண்டுள்ளனர். 

--