(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொராேனா தொற்றை உலகில் இருந்து இல்லாமலாக்கும்வரை மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருபோதும்  இதனை கட்டுப்படுத்த முடியாது.

சுதுவெல்ல பிரதேசத்தில் இருந்து அனுப்பப்பட்டவர்களிடமிருந்தே கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு கொராேனா தொற்று ஏற்பட்டிருக்கவேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு கொராேனா காெத்தணியாக ஏற்பட்டிருக்கின்றது. மத்திய நிலையத்துக்குள் இது எவ்வாறு ஏற்பட்டமை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுதுவெல்ல மற்றும் பண்டாரநாயக்க மாவத்தையில் கொராேனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் போதைக்கு அடிமையாகியிருந்தவர்கள் புனர்வாழ்வளிப்பதற்காக கந்தகாடு புனர்வாழ்வளிப்பு மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் தனிமைப்படுத்தும் காலத்தில் எமக்கு கண்டுகொள்ள முடியாமல்பாேன ஓரிருவர் அந்த இடத்துக்கு சென்றிருக்கலாம். அவர்களிடமிருந்தே கந்தகாடு மத்திய நிலையத்தில் கொத்தணியாக தொற்று பரவ காரணமாக இருக்கும் என சந்தேகப்படுகின்றோம்.

அத்துடன் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தொற்று சமூகத்துக்குள் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றாேம். பிரதானமாக அனைவரும் பின்பற்றவேண்டிய பிரதான அம்சங்களான முகக்கவசம் அணிதல், தனிநபர்களுக்கிடையில் இடைவெளியை பேணுதல் மற்றும் கைகளை கழுவிக்கொள்ளுதல் போன்ற விடயங்களை தொடர்ந்து பேணிவந்தால் இந்த தொற்று பரவும் சாத்தியம் குறைவு. 

என்றாலும் கந்தகாடு மத்திய நிலையத்தில் இன்னும் தொற்றாளர்கள் இனம் காணப்படலாம். இங்கு சேவையில் இருந்த ஒருசிலர் வெளியில் சென்றிருக்கின்றனர்.

அவர்களை இனம்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். என்றாலும் இந்த தொற்று உலகில் இருந்தே இல்லாமலாக்கும்வரை சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பேணி ஒழுகவேண்டும் என்றே நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 

அவ்வாறு இல்லாமல் நிலைமை ஓரளவு சீராகும்போது,பொது மக்கள் வைரஸ் தொற்று தொடர்பில் மறந்து செயற்பட ஆரம்பித்தால் கொராேனா வைரஸ் தொற்றை ஒருபோது எங்களால் கட்டுப்படுத்த முடியாமல்போகும் என்றார்.