(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் காலத்தில் தனியார் துறையினர் வாக்களிப்பதற்கு  மனித உரிமைகள் ஆணைக்குழு, தொழில் மற்றும் தொழில்துறை ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகிய ஆணைக்குழுக்கல் ஒன்றினைந்து உருவாக்கியுள்ள வழிமுறைகளை அனைத்து தனியார் நிறுவனங்களும் முழுமையாக செயற்படுத்த வேண்டும். தூரத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்களாளர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவது அவசியமாகும் என தேர்தல்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

  அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என 1981,1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122  அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டம்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும்.

 அரச சேவை  அதிகாரிகள், ஊழியர்கள் வாக்களிப்பதற்கான விசேட  விடுமுறை  தொடர்பில்   நிறுவன விடுமுறை சுற்றறிக்கையின் 12ம் அத்தியாயத்தில் 12. 3 பிரிவில் குறிப்பிட்டுள்ளதற்கு அமைய பாராளுமன்ற தேர்தலின் போது குறைந்தது 4 மணித்தியாலத்திற்குள் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட  வேண்டும். இதன் போது   சம்பளத்தின்  ஒரு பகுதியை குறைக்காமல்,  விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் .

 இந்த  விடேச  வழிமுறை தனியார் துறை  அதிகாரிகள், சேவையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. சேவையின் போதே வாக்களிக்கும் நிலை தனியார் துறைக்கு ஏற்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

2014.12.22ம் திகதி இலங்கை  மனிதஉரிமை ஆணைக்குழு தொழில் மற்றும் தொழிற்துறை அமைச்சின் செயலாளர், தொழில்துறை செயலாளர்  நாயகம் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றை  ஒன்றினைத்து ஒரு  பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தது. தனியார் துறையினருக்கும் விசேட  விடுமுறை  வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதற்கு அமைய வாக்காளர்கள் வாக்களிக்கும் பிரதேசங்களின் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு     விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று  தீர்மானிக்கப்ட்டது.

 இதற்மைய 40 கிலோமீற்றருக்கு குறைவான  தூர பிரதேசங்களில் உள்ள  வாக்காளர்களுக்கு   அரை நாளும், 40  கிலோமீற்றருக்கும் 100 கிலோமீற்றருக்கும் இடையிலான  தூரப்பிரதேச  வாக்காளர்களுக்கு  ஒரு நாளும்,  100கிலோ மீற்றர்  தொடக்கம் 150 வரையான கிலோமீற்றர் தூரப்பிரதேச  வாக்காளர்களுக்கு ஒன்றரை நாளும், 150  கிலோமீற்றர் தூர பிரதேசத்தில் உள்ள வாக்காளர்களுக்கு  2 நாளும் விடுமுறை  வழங்கப்பட வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.    

  வாக்காளர்கள் இருக்கும்  இடத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு  இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விடுமுறை தேவை என கருதும் வாக்காளர்களின் கோரிக்கையினை குறித்த  நிறுவனம் கவனத்திற் கொள்ள வேண்டும். வாக்களிப்பு அட்டையின் பிரதியினை சான்றுப்படுத்தி  வாக்காளர்கள் தமக்கான விடுமுறையை நிறுவனம் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள   வேண்டும்.

மனித  உரிமைகள் ஆணைக்குழு,  தேர்தல் ஆணைக்குழு,  தொழில் மற்றும் தொழிற்துறை  அமைச்சு ஆகியவை ஒன்றினைந்து  தனியார்துறை  சேவையாளர்களின் நலனை கருத்திற் கொண்டு எடுத்துள்ள  தீர்மானங்களை  அனைத்து தனியார் நிறுவனங்களும் முறையாக  பின்பற்ற  வேண்டும். என்பது தேசிய தேர்ல்கள் ஆணைக்குழுவின்  விசேட கோரிக்கையாகும்