(இராஜதுரை ஹஷான்)

ஒற்றையாட்சிக்குள்  பௌத்த மதத்திற்கு   முன்னுரிமை வழங்கி  ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு  அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சுதந்திரத்துடனும் வாழும் சூழ்நிலை   மீண்டும் உறுதிப்படுத்தப்படும். 

பலவீனப்படுத்தப்பட்ட அரச சேவையை  குறுகிய  காலத்தில் பலப்படுத்தியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

நேற்று இரவு மொறட்டுவை - லுனாவை  பகுதியில் இடம் பெற்ற தேர்தல்  பிரசாரக் கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தில் அரசியல்  தேவைகளுக்காக    பலவீனப்படுத்தப்பட்டிருந்த அரச சேவையை  குறுகிய காலத்தில் பலப்படுத்தினோம்.  அரச துறையினர்   முன்னெடுக்கும் சேவைகள்    பொது மக்கள் மத்தியில்  ஏற்றுக் கொள்ள  கூடியதாகவும், வினைத்திறன்மிக்கதாகவும் காணப்பட வேண்டும்.

கொவிட்-19  வைரஸ்    பரவலை   கட்டுப்படுத்தவும்,   பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கவும் அரச சேவையினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.      நெருக்கடியான  நிலையில் குறைவான வசதிகளுடன்  அரச ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை  வினைத்திறனுடன் முன்னெடுத்தார்கள்.  ஆகவே   பலமான அரசாங்கம்  தோற்றம்பெறுவதற்கு   அரச ஊழியர்களின்  பங்களிப்பு    முக்கியமானது.

அனைத்து இன      மக்களும் சுதந்திரமாகவும், தத்தமது  கலாச்சரங்களை  முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது.   ஒற்றையாட்சி  நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி  ஏனைய  மதங்களின் உரிமைகள்  பாதுகாத்து    அனைத்து  இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.

எமது ஆட்சியில்   விகாரை,  கோவில்,  பள்ளிவாசல்  மற்றும்  தேவாலயம் ஆகியவை  மறுசீரமைக்கப்பட்டன.  அபிவிருத்தி  பணிகளின் போது இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.    நாட்டுக்கே அபிவிருத்தி பணிகள் ஒருமித்த விதத்தில் முன்னெடுக்கப்பட்டன.  வடக்கு , தெற்கு என வேறுப்படுத்தி பார்க்கவில்லை.  என்றார்.