"தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மலையக மக்களை பாதுகாப்பதற்கு நானும், மனோவும், ராதாகிருஷ்ணனும் இருக்கின்றோம். எனவே, எந்த கொம்பனுக்கும் அஞ்சவேண்டாம்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை மெராயா கௌலினா தோட்டத்தில் நேற்று (12.07.2020)மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

" காணி உரிமை, தனிவீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என மலையக மக்களுக்கு பலசேவைகளை நான் கடந்த நான்கரை வருடங்களில் செய்திருந்தாலும், திகாம்பரம் ஒன்றுமே செய்யவில்லை என பொய்யுரைத்து சிலர் வாக்குகேட்பதை காணமுடிகின்றது. என்னை விமர்சித்தே சின்ன, சின்ன வாண்டுகளெல்லாம் ஓட்டு கேட்கின்றன. அதுமட்டுமல்ல மலையகத்தை ஒரே நாளில் மாற்றியமைக்கப்போவதாகவும் கொக்கரிக்கின்றனர்.

யார் என்ன சொன்னாலும், எனக்கு எனது மக்களே முக்கியம். நான் உங்களில் ஒருவன். எனது மக்களுக்கு எவராவது துரோகம் செய்தால் அவர் நிம்மதியாகவாழ முடியாத நிலை ஏற்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என்றார்.

மேலும், எனக்கு நம்பிக்கை நிச்சயம் என்னை வெற்றிபெற வைப்பீர்கள். எனது வெற்றியே மலையகத்தின் வெற்றி. மாற்று அணியினரை வெற்றிபெற வைத்தால் அது மலையகத்துக்கு ஏற்படும் தோல்வியாகும்.

மலையக மக்களை காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையே என குமுறு வருகின்றனர். உங்களை நான் காப்பாற்றுவேன். தோட்டதுரையாக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் உங்களை சீண்டவிடமாட்டேன். எவருக்கும் பயப்படவேண்டாம்.

கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதனை தட்டிக்கேட்கமாட்டார்கள். ஆனால், துணைபோவார்கள். " - என அவர் மேலும் தெரிவித்தார்.