கலிபோர்னிய, சான் டியாகோவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில்  கப்பலொன்றில் ஏற்பட்ட வெடி, தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுள் 17 கடற்படையினரும், நான்கு பொது மக்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

225 மீட்டர் நீளமுடைய கப்பலிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

விபத்தினைத் தொடர்ந்து சான் டியாகோ தீயணைப்பு-மீட்புத் படையினர், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், தீப்பிழம்புகளினால் சான் டியாகோவைச் சுற்றி இருண்ட புகை மண்டலமாகவும் இருந்துள்ளது.

தீ பரவல் ஆரம்பித்த நேரத்தில் கப்பலில் 160 கடற்படையினர் உள்ளிட்ட குழுவினர் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Photo Credit : twitter