ராஜபக் ஷக்களின் ஆட்சியை எதிர்த்து குரல் எழுப்பும் நபர்கள் நாம் என்பதனாலும், ராஜபக் ஷக்களை வீழ்த்தும் சக்தி எம்மிடம் உள்ளதனாலுமே எம்மை இலக்கு வைத்து தாக்குகின்றனர். அவன்கார்ட் விவகாரத்தில் குறித்த நிறுவனம் நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறி நடத்தப்பட்டுள்ளது, இதில் பல கோடி ரூபாய்கள் அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இந்த விவகாரத்தில் கோத்தாபய ராஜபக் ஷ குற்றவாளி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இன்று அவர் ஜனாதிபதியாகிவிட்டார் என்பதற்காக செய்த குற்றங்கள் மாறப்போவதில்லை. அதேபோல் ராஜபக் ஷக்களின் பலத்தை மாத்திரம் அதிகரித்துக்கொண்டு நாட்டினை இராணுவ பிடிக்குள் தள்ளும் நோக்கத்தில் கொண்டுவரும் 20 ஆம் திருத்த சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஒருபோதும் அங்கீகரிக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சம்பிக்க ரணவக்க வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வி முழுமையாக, 

கேள்வி:- புதிய கூட்டணியாக இம்முறை பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள், உங்களது தேர்தல் நகர்வுகள் எவ்வாறு உள்ளது? 

பதில்:- ஆம் நாம் புதிய கூட்டணியாக தேர்தலில் களமிறங்கியுள்ளோம், நாடு முழுவதும் போட்டியிடும் விதத்தில் எம்மை  தயார்ப்படுத்தியுள்ளோம். வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என சகல பகுதிகளிலும் நாம் பிரதிநிதிகளை களமிறக்கியுள்ளோம். கூட்டணி புதிதாக இருந்தாலும் கூட எமது வேட்பாளர்கள் மக்கள் அங்கீகாரத்தை பெற்றவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அரசியலில் யுகப்புரட்சி உருவாக்க வேண்டும், பழைய கட்சிகள் இனியும் அதே கொள்கையில் பயணிக்க முடியாது.

இலங்கையை ஐக்கியமும் சமத்துவமும் கொண்ட  நாடாக கருதும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் இந்த நாட்டில் வாழும் சகல மக்களின் பிரத்நிதித்துவத்தையும் பெற்றுக்கொள்ளும் விதத்தில் செயற்பட வேண்டும். இன்று ஆட்சியமைத்துள்ள கட்சியினருக்கு மதவாச்சிவரையில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அதற்கு அப்பால் வாழும் தமிழர் பிரதிநிதித்துவம் இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை. எனினும் நாம் நாட்டில் சகல மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளோம். எனவே எமது அரசியல் நகர்வு ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கை தரக்கூடிய விதத்திலும் அமைந்துள்ளது. 

கேள்வி:- ஆளும் தரப்பு உறுதியான  அணியாக இம்முறை  தேர்தலை சந்திக்கின்றனர், எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு ஐக்கிய  மக்கள் சக்தியை பலப்படுத்துமென நினைக்கின்றீர்களா? 

பதில்:- ஐக்கிய தேசிய கட்சியினருக்கு குறிப்பிடத்தக்க  எண்ணிக்கை வாக்குகள் இருந்தாலும் கூட கீழ்மட்ட  மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடக்கப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்க 26 ஆண்டுகள் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்த காரணத்தினால் தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து  புதிய அணியொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதேபோல்  ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துடம் ஒரு கட்டத்திற்கு மேல்  ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் பாரிய அழுத்தமொன்றை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் சேர்ந்தே நாம் தனித்த கூட்டணியொன்றை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.  இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முழுமையாக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தை ஏற்றுவிட்டனர். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவில் எமது அணி வெற்றிபெறும். 

கேள்வி:- இம்முறை கொழும்பு மாவட்டத்தின் வேட்பார்கள் மத்தியில் பலத்த போட்டியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த சவாலினை உங்களால் வெற்றிகொள்ள முடியுமென நினைக்கின்றீர்களா? 

பதில்:- கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து நான் கொழும்பில் போட்டியிட்டு வருகின்றேன். அப்போதில் இருந்தே பிரசித்தியான நபர்கள் கொழும்பில் போட்டியிட்டுள்ளனர். எனினும் நான் வெற்றிபெற்றுள்ளேன். இம்முறை கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவில் எம்மால் அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கேள்வி:- புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் அதிகளவில் ஆணைக்குழு விசாரணைகளை எதிர்கொள்ளும் நபராக நீங்கள் உள்ளீர்கள், இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்:- இந்த அரசாங்கம் எமக்கு அஞ்சுகின்றது. நாம் திறமையானவர்கள், ஆளுமை மிக்கவர்கள் என ராஜபக் ஷவினருக்கு நன்றாக தெரியும். ராஜபக் ஷவினரின் ஆட்சியை வீழ்த்தும் பலம் எம்மிடம் உள்ளது என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனாலேயே எம்மை இலக்கு வைத்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு அழைத்து செல்கின்றனர்.

எமக்காகவே ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றது, சிறைச்சாலைகள் திறக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திலும் என்னை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர், தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தல் வழக்கிலும் என்னை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர், அவன்கார்ட் ஊழல் வழக்கிலும் என்னை விசாரணைக்கு அழைத்தனர், இப்போது போர்ட் சிடி விவகாரத்திலும் என்னை விசாரிக்க ஆணைக்குழு அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ராஜபக் ஷக்களின் நோக்கம் ஒன்றுதான், அவர்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை அடக்கி வைப்பதே ராஜபக் ஷவினரின் அரசியல் கொள்கையாகும். மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்காரவை விசாரணைக்கு அழைத்து சென்றது கூட உலகக்கிண்ண போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அல்ல, ராஜபக் ஷவினரின் விளையாட்டு கொள்கைக்கு எதிராக இவர்கள் குரல்கொடுத்த காரணத்தினால் தான் அவர்கள் மீதான விசாரணை தொடுக்கப்பட்டது.

பேராசிரியர் ரத்தஜீவன் ஹூல் மீதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீதும் அரசாங்கம் சீறிப்பாய காரணம் என்ன? கொவிட் காலத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் மோசமான செயற்பாடுகளை எதிர்த்து கேள்வி கேட்டதற்காகவும், தேர்தலை பிற்போட்டதற்காகவுமே  இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ராஜபக் ஷக்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை அடக்குமுறைக்குள் உற்படுத்துவதே இவர்களின் கொள்கையாக உள்ளது. இதில் சிங்கள தமிழ் பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. 

கேள்வி:- அவன்கார்ட் விவகாரத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை கைது செய்ய அழுத்தம் கொடுத்தீர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா? 

பதில்:- அவன்கார்ட் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது நானல்ல. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தான் இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சட்டமா அதிபரே இதற்கான வழக்கு தொடுத்துள்ளார்.

இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . ஆனால் அவன்கார்ட் நிறுவனம் ஒட்டுமொத்த சட்டத்தையும் மீறியே செயற்பட்டது. நாட்டின் அடிப்படை சட்டத்திற்கு எதிராகவே இந்த நிறுவனம் இயங்கியது. கடற்படைக்கு சொந்தமான நிறுவனமொன்றை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தன்வசப்படுத்திக்கொண்டார். இதில் அவர் குற்றவாளி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இப்போது அவர் ஜனாதிபதியானவுடன் செய்த தவறுகள் சரியாகிவிடாது. அரசாங்கதிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய நிதியை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

சட்ட அங்கீகாரம் இல்லாது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரணிகள் குறித்தே ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம் எடுத்தது. சுகத கம்லத்  மற்றும் விஜயதாச ராஜபக் ஷ ஆகியோரே இதனை முதலில் கூறினர். சுகத கமலத்தான் ராஜபக் ஷவினரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தார். பின்னர் அவரை பிரதம நீதியரசராக மாற்றுவதாக ராஜபக் ஷவினர் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதனை அடுத்தே நிலைமைகள் மாறியது. இவர்கள் பணத்திற்காக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நபர்கள். ராஜபக் ஷவினருக்கு  தண்டனை கொடுப்பதாக கூறி 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவாகிய விஜயதாச  இன்று ராஜபக் ஷக்களுடன் இணைந்து எம்மை தண்டிக்க வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றார்.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த சிலர் அப்போதில்  இருந்தே ராஜபக் ஷவினருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும், நடப்பவற்றை  ராஜபக் ஷவினருக்கு கூறியதாகும் இன்று  பிரசித்தியாக கூறுகின்றனர், அப்படியென்றால்  நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்த அப்போதே சூழ்சிகள் வகுக்கப்பட்டுவிட்டதா? 

பதில்:- அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஐக்கிய தேசிய கட்சியின் சிலரும் அப்போதில் இருந்தே ராஜபக் ஷக்களின் தேவைக்காக செயற்பட ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தவர்களில்  பிரதான இடத்தில் இருந்த 18 பேர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு கூறினர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் இவர்கள் எவருமே அலரிமாளிகை பக்கமேனும் வரவில்லை. நாமே ரணிலுடன் இருந்து அவரை மீண்டும் பதவிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். ஐக்கிய தேசிய கட்சியில் பலர் ராஜபக் ஷக்களுடன் இணைந்து செயற்பட்டனர், இன்றும் அதே உறவு நீடிக்கின்றது. அப்போது நாம் இவர்களை கட்டுப்படுத்த தவறியமையே நாம் செய்த மிகப்பெரிய தவறாகும். நல்லாட்சி அரசாங்கம் நாசமாக்கவும் அதுவே காரணமாகிவிட்டது. 

கேள்வி:- எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திட நீங்கள் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும் இந்த அரசாங்கம் அதனை தடுத்துள்ளதாகவும் கூறுவதன் உண்மைத்தன்மை என்ன? 

பதில்:- எம்.சி.சி உடன்படிக்கை கைச்சாத்திட திட்டமிருக்கவில்லை, ஒரு உடன்படிக்கை குறித்து இரு நாடுகளும் பேசும் வேளையில் அது எவ்வாறான உடன்படிக்கை என்பதை அவதானிக்க வேண்டும். நாம் உடன்படிக்கையை கைச்சாத்திட இடமளிக்கவில்லை. ஆனால் ராஜபக் ஷவினரின் ஆட்சியில் நிச்சயமாக அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.

இப்போது மட்டுமல்ல மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் டோல் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை கொடுத்து நிறுவனம் ஆரம்பிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. இப்போதும் பல அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் தமது உற்பத்திகளை முன்னெடுக்க ஆரம்பித்து வருகின்றனர். அரசாங்கம் அமெரிக்காவிற்கு முழுமையாக இடம் வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதனை தடுக்கவே நாம் போராடிக்கொண்டுள்ளோம். நாட்டின் முக்கியமான நிலங்களை அமெரிக்கா சூறையாடப்போகின்றது. துறைமுக நகர் திட்டத்தையும் நாமே மீட்டோம். ஆனால் ராஜபக் ஷனர் பெயர் சூடிக்கொண்டுள்ளனர். ராஜபக் ஷ நாட்டின் அக்கறையாளர், படித்தவர் என கூறிக்கொண்டு கோத்தாபய ராஜபக் ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்தாலும் இவர்களின் சுய ரூபம் அதுவல்ல, நாட்டினை முழுமையாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு விற்கவே இந்த ஆட்சியாளர்கள் உருவெடுத்துள்ளனர். 

கேள்வி:- இதே குற்றச்சாட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீது உள்ளதே, மத்தியவங்கியை கொள்ளையடித்தவர்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து ஏன் வாய் திறக்காதுள்ளீர்கள்? 

பதில்:- சகல அரசாங்கதிலும் ஊழல் வாதிகள் ஒருசிலர் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். எமது ஆட்சியிலும் கொள்ளையர்கள் இருந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை. மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரனை நியமிக்க அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தபோது நானும், ராஜித சேனாரத்னவுமே எதிர்த்தோம்.

அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் முடிந்தும் அவர்  பதவி நீக்கப்படாது தொடர்ந்தும் செயற்பட்ட நேரத்தில் அவரது பதவியை பறிக்குமாறு நானே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன். ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் மோசமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டை நாம் இப்போதும் முன்வைத்தே வருகின்றோம். 

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அக்கறையில்லாமல் செயற்பட்டதாக கூறும் விமர்சனந்தை  நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- இந்த காரணியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே காரணம். இவர்கள் இருவரும் முரண்பட்டவுடன் அதிகாரிகளுக்கு இருவரதும் கோரிக்கைகளை செயற்படுத்துவதில் நெருக்கடி நிலைமை உருவாகியது. யாருடைய கட்டளைகளை ஏற்றுக்கொள்வது என்ற பிரச்சினை எழுந்துவிட்டது.

ஆனால் நாட்டிற்கு எதிரான சூழ்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது குறித்த தகவல்கள் கிடைத்தும் அதனை ஜனாதிபதி, மற்றும்  பிரதமர் அனுமதி வழங்கும் வரையில் செயற்படுத்தாது  இருக்க வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இல்லை.

அவ்வாறான காரணிகளை எவரும் கூற முடியாது. ஈஸ்டர் தாக்குதலுக்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டியது பொலிஸ் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளுமேயாகும். அதன் பின்னரே ஜனாதிபதி பிரதமர் உரிய அமைச்சர்கள் பொறுப்பாளியாவார்கள். 

கேள்வி:- ஜனாதிபதி ராஜபக் ஷ அரசாங்கதின் தேசிய பாதுகாப்பு கொள்கை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 

பதில்:- தேசிய பாதுகாப்பு எனக் கூறிக்கொண்டு நாட்டில் இராணுவ முகாம்கள் உருவாவது என்பது தேசிய பாதுகாப்பிற்கு சாதகமானது எனக் கருத வேண்டாம். தேசிய பாதுகாப்பு என்பது வேறு, இராணுவ முகாம்கள் அமைப்பது என்பது வேறு. அரசாங்கமே இன்று ஒரு இராணுவ முகாமாக மாறிவிட்டது. சகல துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்துக்கொண்டு வயலில் வேலை செய்வது தொடக்கம் நோயாளிக்கு மருந்து கொடுப்பது வரையில் அனைத்தையும் இராணுவத்தை கொண்டு செய்கின்றனர். இது அரச சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் இன்று கேள்விக்குறியாக வருகின்றது. 

கேள்வி:- அப்படியென்றால் ஜனாதிபதி இராணுவ ஆட்சியை நோக்கி பயணிக்கின்றார் என்பதா உங்களின் கருத்து? 

பதில்:- நிச்சயமாக இராணுவ ஆட்சியை நோக்கியே இவர்கள் பயணிக்கின்றனர். இராணுவம் கூட இதனை விரும்பவில்லை என்பதே உண்மையான காரணியாகும். அவர்களுக்கு பொருந்தாத சிவில் செயற்பாடுகளுக்குள் இராணுவத்தை பயன்படுத்துவதை அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. வலுக்கட்டாயமாக நாடு இராணுவ மயமாகிக்கொண்டுள்ளது. 

கேள்வி:- இவ்வாறான நிலையில் 19 ஆம் திருத்தத்தை நீக்கி 20ஐ கொண்டுவர பாராளுமன்றத்தில் உங்களின் ஆதரவை அரசாங்கம் கோரினால் என்ன செய்வீர்கள்? 

பதில்:- 19 ஆம் திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் 19 ஆம் திருத்தத்தின் முக்கிய வெற்றி என்னவென்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டதாகும். ஒரு மட்டத்திலாவது நாடு சுயாதீனமாக இயங்கிய காரணத்தினால் தான் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியை நீதிமன்றம் சென்று தோற்கடிக்க முடிந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீனமாக்கிய காரணத்தினால் தான் கொவிட்  காலத்தில் தேர்தலை நடத்தாது தடுக்க முடிந்தது. அரச சேவையில் சுயாதீனத்தை உருவாக்கிக்கொள்ள  முடிந்தது. அதற்காக அனைத்து ஆணைக்குழுக்களின் மூலமாக  சாதகமான முடிவுகள் கிடைத்ததாக   கூறவும் முடியாது. எனினும் 19 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் என்ற எந்தவொரு தேவையும் இல்லை.

ராஜபக் ஷவினர் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே, ஆணைக்குழுக்கள் அனைத்தையும் நீக்கி அதிகாரத்தை பிரதமரின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அடுத்ததாக ராஜபக் ஷ குடும்பத்திற்கு நெருக்கடியான விடயமாக மாறியுள்ள இரட்டை பிரஜாவுரிமை  கொண்ட எவரும் வாக்குக் கேட்க முடியாது என்பதை மாற்றியமைக்க வேண்டும்.

பசில் ராஜபக் ஷவை அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்துடன் பாராளுமன்றதிற்கு கொண்டுவரவே இவர்கள் முயற்சிக்கின்றனர். ஆகவே இந்த சுயநல நோக்கங்களை நிறைவேற்றும் 20 ஆம் திருத்தத்திற்கு நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. எமது நோக்கம் ஜனநாயகம் சார்ந்ததே தவிர சர்வாதிகாரிகளை உருவாக்குவதல்ல. 

கேள்வி:- அப்படியென்றால் 13 ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- 13 ஆம் திருத்த சட்டத்தை நீக்க மஹிந்த ராஜபக் ஷவினருக்கு எந்த நோக்கமும் இல்லை, அவ்வாறு செய்வதென்றால் கடந்த 2013 ஆம் ஆண்டே 13 ஆம் திருத்த சட்டத்தை நீக்கியிருக்கலாம். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர்  இந்தியாவிற்கு சென்ற  அவர் கூறியது என்ன. 13 ஆம் திருத்த சட்டத்தை விஞ்சிய அதிகார பகிர்வொன்றை தமிழர்களுக்கு  தருவதாக கூறினார். சர்வதேசத்திற்கு ஒரு கதையையும் இங்கு வேறு கதையையும் கூறினார்.

இன்றும் அவ்வாறே கூறி வருகின்றார். 13 ஆம் திருத்த சட்டம் இந்தியாவின் தலையீட்டில் கொண்டுவரப்பட்டது. தமிழர்களுக்கு இதில் தீர்வு உண்டு என்பதை கூறிக்கொண்டு இந்தியா தலையிட்டு இந்தனை எமக்கு திணித்தது. ஆனால் எனது கருத்து என்னவென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிதுவம் என்பது 13 ஆம் திருத்தத்துடனோ  வடக்கு கிழக்குடனோ நின்றுவிடக்கூடாது. தமிழர்கள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.

அதை தவிர்ந்து அவர்களை ஒரு  மூலைக்குள்  நெருக்கிவிடக் கூடாது. வடக்கில் உள்ள தமிழர்களை விடவும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாகும். ஆகவே அவர்கள் தமக்கான ஒரு பிரதேசத்தை மாத்திரம் உரிமை கோரிக்கொண்டு இருக்காது, முஸ்லிம் பிரதிநிதிகளும் மலையக பிரதிநிதிகளும் எவ்வாறு அரசாங்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு அவர்களின் சமூகத்திற்காக உரிமைகளை பெற்றுக்கொள்கின்றனரோ அதேபோல் வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரத்நிதிகளும் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு தமது மக்களுக்காக சேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். '

தனியாக போராடிக்கொண்டு இருப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது இந்த நாட்டில் பல காலமாக வெளிப்பட்டுள்ள காரணியாகும். தமிழர் பிரதிநிதிகள் ஏன் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை. தமிழர்களை யாழ்ப்பாணத்துடன் முடக்கிவிட வேண்டாம். இன்றைய சூழல்  மாறுதல்களுக்கு அமைய அடுத்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்ற சூழலியல் ஆய்வுகள் கூறுகின்றது. வட பகுதி கடலரிப்பிற்கு  முகம்கொடுக்கப்போகின்றது, அதேபோல் குடிநீர் பிரச்சினை உருவாகப்போகின்றது. எனவே தமிழர்கள் ஆரோக்கியமான வகையில் சிந்தித்து  சகல பகுதிகளிலும் அவர்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். தமிழர் பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்தில் அங்கதத்துவம்  பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் தலைமைகள் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கொள்கையை உருவாக்குங்கள் என்பதே எனது கருத்தாகும். 

கேள்வி:- அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டால் உங்களின் நிலைமை என்னவாகும்? 

பதில்:- ஒருபோதும் இவர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்ற முடியாது. சஜித் பிரேமதாச தலைமையில் நாமே அரசாங்கத்தை அமைப்போம். 

கேள்வி:- அப்படியென்றால் மீண்டும் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைந்து முரண்பாடுகளுடன்  ஆட்சியை கொண்டு செல்லப்போகின்றீர்களா? 

பதில்:- அப்படி எதனையும் செய்யப்போவதில்லை, அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்தால் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சியை முன்னெடுப்போம். ராஜபக் ஷக்களின் தலைமைத்துவம் இருக்கும், ஆனால் அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்துவோம் என்ற அர்த்தமில்லை. இந்த நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகமே மேலானது. அதனை வைத்துக்கொண்டு ஆட்சியை முன்னெடுக்க முடியும். அதேபோல் 19 ஆம் திருத்தம் இருக்கின்றது. அது எமக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. முதலில் ஆட்சியை அமைத்து பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராயலாம். 

தமிழ் மக்களின் பிரதிநிதிதுவம் என்பது 13 ஆம் திருத்தத்துடனோ  வடக்கு கிழக்குடனோ நின்றுவிடக்கூடாது.  சுயநல நோக்கங்களை நிறைவேற்றும் 20 ஆம் திருத்தத்திற்கு நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை.  ரணிலின் தவறான தலைமைத்துவமே புதிய கட்சியை உருவாக்க காரணமாக அமைந்தது  மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்காரவை அச்சுறுத்தவே இந்த அரசாங்கம் அவர்களை விசாரணைக்கு அழைத்தது. 

நேர்காணல் :- ஆர்.யசி 

படப்பிடிப்பு :- ஜே,சுஜீவகுமார்.