-என்.கண்ணன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு முடிவை எடுத்து விட்டால், அதில் மாற்றம் எதையும் செய்வதை விரும்புவதில்லை என்று பொதுவாக கூறப்படுவதுண்டு. அதனை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி விடயத்தில் அவர் எந்தளவுக்கு பிடிச்சிராவித்தனமாக இருக்கிறார் என்பதை, கடந்த 7ஆம் திகதி  வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த மாத தொடக்கத்தில் கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் அமைக்கப்பட்ட இந்த செயலணியில்,  எல்லாவெல மேதானந்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள்,  கல்வியாளர்கள்,  மற்றும் படை அதிகாரிகள் 11 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த செயலணி, ஏற்கனவே கூட்டங்களை நடத்த ஆரம்பித்து விட்ட நிலையில்,  இதன் செயற்பாட்டை  வடக்கிற்கும் விரிவுபடுத்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள சூழலில்,  கடந்த 7ஆம் திகதி இந்தச் செயலணியின் மற்றொரு உறுப்பினராக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிசை நியமிக்கும் அறிவிப்பை வர்த்தமானி மூலம்,  அறிவித்திருக்கிறார் ஜனாதிபதியின் செயலாளர்.

கடந்த மாதம் இந்த செயலணி உருவாக்கப்பட்ட போது,  அதற்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன.

அதற்கு முதலாவது காரணம்,  இது இராணுவ மயமாக்கலை முன்னிலைப்படுத்தியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட படை அதிகாரிகள் பலர் செயலணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர். இது இராணுவ மயமாக்கலை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுவதற்கு காரணமாக இருந்தது.

இரண்டாவது காரணம்,  கிழக்கு  தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில்,  கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையினரான தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

இது ஒரு பக்கம் சிறுபான்மையினரை ஓரம்கட்டி ஒதுக்கும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்ட அதேவேளை,  மறுபக்கத்தில் சிங்கள மயமாக்கலை  தீவிரப்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாகும் பார்க்கப்பட்டது.

இது குறித்து அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  சர்வதேச நிறுவனங்கள் என்று எல்லா எல்லாத் தரப்பினரும்,  ஜனாதிபதிக்கும்,  அரசாங்கத்திற்கும் அறிக்கைகள் மூலமாகவும், நேரிலும்,  சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனால்,  ஜனாதிபதியும் அரசாங்கமும் அதற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில்,  இந்த குறைபாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டதாகவும்,  அதையடுத்து, சிறுபான்மை பிரதிநிதிகள் இருவரை உள்ளடக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது என்றும்,  செய்திகள் வெளியிடப்பட்டன.

தமிழ் ஊடகங்களின் பிரதானிகளுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ச நடத்திய சந்திப்பின் போது,  இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது தமிழ் பிரதிநிதி ஒருவரை கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பொருத்தமான ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

11 சிங்களப் பிரதிநிதிகளைத் தேடிப் பிடித்த அரசாங்கத்தினால், ஒரு தமிழ்ப் பிரதிநிதியை தேடிப் பிடிப்பது கடினமாக இருக்கிறது என்பது வேடிக்கையான கருத்தாகவே இருந்தாலும், அது நடக்கும் என்றே பலரும் நம்பியிருந்தனர்.

ஆனால், கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் மூலம், இந்தச் செயலணிக்குப் புதிதாக ஒரு உறுப்பினர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் தமிழரோ முஸ்லிமோ அல்ல.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரான றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், செயலணியின் மேலதிக உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் மூலம், இரண்டு விடயங்களை ஜனாதிபதி உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒன்று, இந்தச் செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்பது. இரண்டு, இராணுவ மயமாக்கல் தொடரும் என்பது.

கிழக்கு தொல்பொருள் செயலணிக்குள் சிறுபான்மையினர் எவரையும் உள்ளடக்காததன் மூலம், கடந்த மாதம் வெளிப்படுத்திய கருத்தை, இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம், மீள உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.

Government without Parliament and Government by the Military ...

அதேவேளை, இராணுவ மயமாக்கல் குற்றச்சாட்டுகளைப் பற்றி ஜனாதிபதி கவலைப்படவோ அதுசார்ந்த முடிவுகளில் இருந்து விலகிக் கொள்ளவோ தயாராக இல்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதனைக் கொண்டு, என்னதான் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் குத்தி முறிந்தாலும், தலைகீழாக நின்றாலும், சர்வதேச அமைப்புகள், கண்டனங்களைத் தெரிவித்தாலும், கோட்டாபய ராஜபக்ச தனது முடிவை மாற்றிக் கொள்பவர் இல்லை என்ற முடிவுக்கே வர முடிகிறது.

இது ஏற்கனவே அவரைப் பற்றி பொதுவாக உள்ள அபிப்பிராயம் தான். அதனை அவர் ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர், மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.

இவரது எஞ்சிய பதவிக்காலத்திலும் இதுதான் நடக்கப் போகிறது என்பதை, இந்த ஒரு விடயத்தில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

கோட்டாபய ராஜபக்சவின் இந்த போக்கிற்கு,  மகிந்த ராஜபக்சவும் கூட அடிபணிய வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்.

இல்லையேல்,  அவர் பொருத்தமான தமிழர் ஒருவரை  தேடிக் கொண்டிருக்கிறது அரசாங்கம் என்று கூறி,  தனது பெயரை கெடுத்துக் கொண்டிருக்கமாட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விடயங்களில் இராணுவத் தலையீடுகள் இருக்கும் என்பதை,  கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொது ஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்பீரிசும்,  உறுதிப்படுத்தி இருந்தார்.

சிக்கலான விடயங்களை கையாளுவதற்கு,  இராணுவ தலைமைத்துவம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும்,  ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்ட வகையில் கையாளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை நாட்டில் இராணுவ ஆட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்றும்,  சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரி்த்திருந்தார்.

இராணுவ தலையீடுகளை நியாயப்படுத்தும் வகையில் ஜிஎல். பீரிஸ் போன்றவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களும் சரி, செயலணி நியமனம் விடயத்தில் கோத்தாபய ராஜபக்ச கையாளும் அணுகுமுறையும் சரி,  எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் இராணுவ ஆட்சி பற்றிய முன்னெச்சரிக்கைகளும் சரி,  நாடு பயங்கரமான நிலை ஒன்றுக்கு முகம் கொடுக்கப் போகிறது என்பதையே  உணர்த்தி நிற்கின்றன.

இராணுவ மயப்பட்ட ஒரு ஆட்சியை நோக்கி இலங்கைத் தீவு நகர்ந்து கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பதை,  ஐ.நா அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் சான்று பகருகின்றன.

இந்தச் சூழலானது,  ஜனநாயக மயப்படுத்தப்பட்ட இராணுவ ஆட்சி நடந்த பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சூழலையே கண்முன் கொண்டு வருகின்றன.

ஜெனரல் ஷியா உல் ஹக், ஜெனரல் பர்வேஷ் முஷாரப் போன்ற இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தானில் தேர்தல்கள் நடந்தன. ஆனால், ஒருபோதும் ஜனநாயகம் தளைக்கவில்லை.

அதே நிலை தான் லெப்.கேணல் கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியிலும் இலங்கையில் இருக்கப் போகிறது.