-ஹரிகரன்

“மத்தல விமான நிலையம், எனது சொந்த மாவட்டத்தில் இருக்கிறது, அதனை குத்தகைக்கு வழங்க முடியாது. இதனை நான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது கூறி விட்டேன்” என்று அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

மத்தல விமான நிலையம் ஊ டா க வெளி நாடு ...

சீனாவிடம் பெறப்பட்ட 210 மில்லியன் டொலர் கடனில், அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை, வெள்ளை யானை என்று வர்ணித்த, ஐக்கிய தேசியக் கட்சி, அதனை இந்தியாவுக்கு  குத்தகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

ஆனால், இந்தியா இதனை முழுமையாகப் பெறுவதற்கு முற்பட்டதே தவிர, குறைந்தளவு உரிமைகளுடன், முதலீடு செய்வதற்கு விரும்பவில்லை.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த பேச்சுக்கள் தீவிரமாக நடக்கவுமில்லை.

ஆனால், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தி விட்டது போன்று தனது வாக்காளர்கள் மத்தியில் காண்பிக்க முயன்றிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

இதேபோன்று கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முடியாது என்று துணிச்சலாக கூறுகின்ற திராணி இப்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை.

முன்னைய அரசாங்கம் கிழக்கு கொள்கலன் முனையத்தை, இலங்கை- இந்திய- ஜப்பானிய முத்தரப்பு கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கம் கண்டிருந்தது, அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

அப்போது அதனை கடுமையாக எதிர்த்த மகிந்த ராஜபக்ச தரப்பு, - நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டியது.

East Container Terminal blunder: Learn from Chinese | Daily FT

ஆனால், அந்த தரப்பு ஆட்சிக்கு வந்ததும், கிழக்கு கொள்கலன் முனையத்தை, இந்தியாவுடன் இணைந்து, அபிவிருத்தி செய்வதற்கான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று இராட்சத பாரம் தூக்கிகளை இறக்காமல், இழுத்தடிக்கப்பட்ட நிலையில், துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

கிழக்கு கொள்கலன் முனையத்தில் அதனை பொருத்த வேண்டும் என்றும், இந்தியாவிடம் கொடுக்காமல் துறைமுக அதிகாரசபையே அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்களின் தலைவர்களை மெதமுலான இல்லத்துக்கு அழைத்துப் பேசி, தற்காலிகமாக அந்த பாரம் தூக்கிகளை கிழக்கு கொள்கலன் முனையத்தில் பொருத்துவதற்கு இணக்கம் கண்டிருக்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

இது இந்தியாவைப் பொறுத்தவரை, ஏமாற்றத்தை அளிக்கின்ற செயல்.

இந்தியாவின் 70 வீதமான கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையமே கையாளுகிறது.

எனவே, அதனை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவது இயல்பு.

Narendra Modi Thanked Rajapaksa For Releasing Indian Fishermen ...

ஏற்கனவே, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையம், சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவும் தனக்கான வசதிகளை (Facilities) பெற்றுக் கொள்ள நினைக்கிறது.

இதற்கு முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடையூறுகள் இருந்தபோதும் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் அதனைச் செயற்படுத்துமா என்ற கேள்வி இருந்த நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவே, அண்மையில் இந்தியப் பிரதமர் மோடியுடன், தொலைபேசியில் பேசிய போது, இந்த திட்டத்தை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பின்னரே, கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. இதனால் அந்த திட்டம் இப்போது குழப்பத்தில் உள்ளது.

ஆனால், இந்தியாவோ இந்த திட்டத்தை செயற்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றிக் கொண்டதை விட, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தனது கையை விட்டுப் போவதை தான், இந்தியா பெரிய விடயமாக கருதும்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கைத் தீவில் இந்தியாவின் நலன்கள் கேள்விக்குள்ளாகி வருகின்றன.

மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு கிடைக்காது என்று கூறப்பட்டு விட்டது. கொழும்பு துறைமுக்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிலையும் இப்போது, சிக்கலாக மாறியிருக்கிறது.

இவை இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக ஏற்படக் கூடிய இழப்பு மாத்திரமல்ல.

இராஜதந்திர ரீதியாகவும் மதிப்பு ரீதியாகவும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிகப் பெரியது.

கொழும்பு துறைமுகமோ, மத்தல விமான நிலையமோ இந்தியாவின் கையை விட்டுப் போவதானது, அதன் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், இந்த திட்டங்களில் இருந்து நிராகரிக்கப்படும் போது, அல்லது ஒதுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஏற்படுகின்ற கௌரவ இழப்பு என்பது முக்கியமானது. அது மிகப் பெறுமதியானது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனி ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு பிராந்திய வல்லரசாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் அருகில் உள்ள சின்னஞ் சிறிய நாடான இலங்கை, இந்தியாவின் நலன்களுக்கு மாறாக செயற்படுவதை உலகம் வேறொரு நிலையில் இருந்தே நோக்கும்.

இலங்கையை தனது கொல்லைப் புறமாகவே கருதும் இந்தியா, அதில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து, தனது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை எந்தளவுக்கு சகித்துக் கொள்ளும் என்பது கேள்விக்குரியது.

இத்தகையதொரு நிலையில், மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களும் இந்தியாவுக்கு சவால் விடுப்பதாகவே உள்ளது.

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தர வேண்டும் என்று கோரியுள்ள மகிந்த ராஜபக்ச, உறுதியான அரசாங்கத்தை அமைத்தால் தான், 19 ஆவது திருத்தம், 13 ஆவது திருத்தம் ஆகியவற்றை மாற்றியமைக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப் போவதாக மட்டும் கூறிக் கொண்டிருந்த ராஜபக்சவினர் இப்போது, 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கின்ற கடும் இனவாதிகள் பலர் ராஜபக்ச முகாமில் இருக்கிறார்கள். அவர்களுக்கு 13 மீதோ, மாகாண சபைகள் மீதோ பிரச்சினையில்லை.

மாகாண சபைகளுக்கு இருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்களால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதிகாரங்களைப் பெற்று விடுவார்களோ என்பது தான் அவர்களின் பிரச்சினை.

அதனை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு அவர்கள் கங்கணம் கட்டியிருக்கிறார்கள்.

அந்தக் கூட்டாளிகளின் வலையில் ராஜபக்சவினரும சிக்கியிருக்கிறார்கள் என்பதை, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இப்போதைய கருத்துக்களில் இருந்து உணர முடிகிறது,

13 ஆவது, 19 ஆவது  திருத்தச்சட்டங்களை திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று அவர் கோரியிருப்பது இந்தியாவை எரிச்சலடையச் செய்யும்.

ஏனென்றால் 13ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவின் குழந்தை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே அது உருவாக்கப்பட்டது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா முன்வைத்ததே 13 ஆவது திருத்தச் சட்டம். இந்த சட்டத்தை இயற்றியது இலங்கை நாடாளுமன்றமாக இருந்தாலும் அதற்குப் பின்னால் முழுப் பக்கபலமாக இருந்தது இந்தியா தான்.

அந்த 13 ஆவது திருத்தச்சட்டத்தை பிடுங்கும் போது, இந்தியாவுக்கு பல விடயங்களில் பின்னடைவு ஏற்படும்.

இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு இந்தியா முன்வைத்த தீர்வுத் திட்டம், நிராகரிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டதாகி விடும்.

தமிழர் நலன்களை இந்தியா காப்பாற்றும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கை உடைக்கப்பட்டு விடும்.

இலங்கை மீதான செல்வாக்கை இந்தியா நிரந்தரமாக இழந்து விட்டது என்ற சர்வதேச அபிப்பிராயம் தோற்றுவிக்கப்பட்டு விடும்.

ஆக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மீது அரசாங்கம்  கை வைத்தாலும் சரி, அதனை முற்றாக நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க முனைந்தாலும் சரி, அது இந்தியாவுக்கு மறைமுக இழப்பை ஏற்படுத்தும்.

மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரங்களின் போது, சலூன் கதவை அகற்றி விட்டு இரும்புக் கதவைப் போடுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு கோருகிறார்.

அவர் சலூன் கதவு என்று கூறுவது தனியே உறுதியற்ற அரசாங்கத்தை மட்டுமல்ல.  இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகளையும் கூடத் தான்.

அத்தகைய சக்திகள் வந்து செல்வதை தடுப்பதற்கு இரும்புக் கதவைப் போட முனைகிறார்.

இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தம், கிழக்கு கொள்கலன் முனையம், மத்தல விமான நிலையம் உள்ளிட்ட இலங்கைத் தீவில் இந்தியாவின் எதிர்பார்ப்புகள், நலன்களை இலங்கை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்க முனைந்திருக்கிறது.

இது இந்தியாவுக்கு விடுக்கப்படுகின்ற பெரியதொரு சவால். இதற்கு இந்தியா எப்படி எதிர்வினை ஆற்றப் போகிறது?