தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’

12 Jul, 2020 | 07:33 PM
image

-கபில்

தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள்.

வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும்,  அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை  தொடர்கிறது.

தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள்.

வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான  கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் மத்தியில் இலாபம் தேடுகின்ற முறைதான் வேறுபடுகின்றதே தவிர, இரண்டு தரப்புக்குமே, விடுதலைப் புலிகள் தான் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்து வருகின்றனர்.

இந்த தேர்தலிலும் அந்த பொன் முட்டையிடும் வாத்தை பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்- சிங்கள அரசியல்வாதிகள்  தயங்கவில்லை.

இந்த முறை தமிழ் அரசியல் பரப்பில் கிழக்கில் கருணா தொடங்கி வைத்த பிரசாரம் இப்போது வடக்கிலும் தீவிரமடைந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று, அரசாங்கத்துக்கு தேவையான தகவல்களைக் கொடுத்து, புலிகள் இயக்கத்தின் அழிவுக் காரணமான கருணா, இப்போது புலிகள் இயக்கத்தில் தாம் இருந்த போது பெற்றுக் கொண்ட நன்மதிப்பை,தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில், பிரதியமைச்சராக இருந்த போது செய்த நல்ல விடயங்கள் குறித்து, பிரசாரம் செய்வதை விட, அவர்  புலிகள் இயக்கத்தில் போராட்டத்தில் பெற்ற நற்பெயரையே பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்.

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களின் பெயர்களை அவர் மேடைகளில் கூறித் திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

யாரை அவர் விமர்சித்துக் கொண்டு, வெளியேறினாரோ- அவர்களை வைத்தே இன்று வாக்குக் கேட்கும் நிலையில் இருக்கிறார் கருணா.

அவர் மாத்திரமன்றி, புலிகளையும், புலிகளின் கொள்கைகளையும் விமர்சித்தவர்கள் கூட, இப்போது புலிகளுக்காக பேசுகிறார்கள், புலிகளைப் புகழுகிறார்கள்.

வடக்கு அரசியல் களத்தில் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவது இன்னும் அதிகம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று எல்லா தரப்புகளுக்கும் ஏதோ ஒரு வகையில் புலிகளையும் புலிகளின் போராட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளே உருவாக்கினர் என்று ஒரு பக்கம் கூறப்படுகின்ற நிலையில், கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் அதனை மறுத்து வந்தனர்.

ஆனால், கருணா இப்போது, தானே கூட்டமைப்பை உருவாக்கினேன் என்று உரிமை கோருகிறார்.

இன்றொரு புறத்தில், தம்பி பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பு என்ற வீடு இப்போது சிதைந்து போய்க் கிடக்கிறது என்று ஏளனமான குறிப்பிட்டிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“பிரபாகரன் உருவாக்கிய வீடு” என்று அவர் குறிப்பிட்டது, தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டைத் தான்.

ஆனால், அதற்கு இன்னொரு வகையிலும் அர்த்தம் கொள்ள முடியும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.

கூட்டமைப்பு இப்போது வழி கெட்டுப் போயிருக்கிறது என்று அவர் விமர்சித்திருக்கலாம்.

அதற்குள் “தம்பி பிரபாகரனை” விக்னேஸ்வரன் கொண்டு வந்தது அப்பட்டமான அரசியல் நோக்கத்துடன் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

நாடாளுமன்றப் பதவியைக் கூட ...

இறுதிக் கட்டப் போர் வரை, முள்ளிவாய்க்காலில் இருந்தவர் அவர். புலிகளின் போக்குவரத்துப் பிரிவில் சாரதியாக இருந்து விட்டு, லெப்.செல்லக்கிளி அம்மானின் சகோதரர் என்ற அடிப்படையில், புலிகளே அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.

2004 பொதுத்தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்த புலிகளின் நம்பிக்கையை, அவர் இப்போது மொட்டு கட்சிக்காக துஸ்பிரயோகம் செய்கிறார்.

போரின் முடிவுக் கட்டத்தில் இனி போராட்டம் சரிப்படாது, போய் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்காக எதையாவது செய்யுங்கள் என்று, புலிகளின் தளபதிகள் தன்னிடம் கூறி அனுப்பி வைத்தனர் என்று கூறியிருக்கிறார் கனகரத்தினம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஏன் மகிந்த ராஜபக்சவின் தரப்புடன் இணைந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

இவர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது அவரது விருப்பம்.

அதற்காக, புலிகள் கூறியபடி தான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக கூறித் திரிவது தான் மோசமான செயல்.

முள்ளிவாய்க்கால் களத்தில் இப்படியொரு ஆலோசனை கூறப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை.

மொட்டு கட்சியின் சாதனைகளைக் கூறி, அல்லது வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற முடியாது என்பதால் தான்-  அவர், புலிகளின் தலைவர்கள் கூறினார்கள், அரசாங்கத்துடன் இணைந்தேன் என்று வாக்கு பிச்சை கேட்கிறார்.

இவரைப் போல பலர், புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தக் கிளம்பியிருக்கிறார்கள்.

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் எவரிடத்திலும், அரசியல் ஆளுமை இல்லை என்றே கருத வேண்டும்.

அரசியல் ரீதியாக கொள்கைகளை முன்னிறுத்தியோ, திட்டங்களை முன்வைத்தோ வாக்குகளைக் கேட்கும் திராணியற்றவர்களுக்கே. புலிகள் இலகுவான வாக்குத் தேடும் கருவிகளாக இருக்கிறார்கள்.

புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை, வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரமோ, அருகதையோ யாருக்கும் கிடையாது.

அது புலிகள் இயக்கத்தின் போராளியாக இருந்தாலும் சரி, பொறுப்பில் இருந்தவர்களாக இருந்தாலும் சரி, அத்தகைய அருகதை யாருக்கும் கிடையாது.

புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்று அர்த்தமில்லை.

ஏனென்றால், புலிகள் இயக்கத்தில்,- அதன் வளர்ச்சியில், உயிர்துறந்த 30,000 பேருக்கு மேற்பட்டவர்கள், போராளிகளாக இருந்த பல்லாயிரம் பேர், இந்தப் போராட்டத்துக்கு பின்புலத்தில் இருந்து உதவிய இலட்சக்கணக்கானவர்கள் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது.

காசைக் கொடுத்து, இயக்கத்தை வளர்த்தவர்களாகட்டும், உயிரைக் கொடுத்து போராடியவர்களாகட்டும், உடல் உறுப்புகளை இழந்து வாடுபவர்களாகட்டும்,  எல்லோரும் சேர்ந்து உருவாக்கியது தான் புலிகள் இயக்கம்.

இலட்சக்கணக்கானவர்களின் தியாகங்களாலும், உணர்வுகளாலும், குருதியாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்.

இதனை தனியொருவர் உரிமை கோரவும் முடியாது. தனியொருவரின் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது.

Karuna Amman summoned to CID - Ceylon Today

முன்னாள் போராளிகள் கூட தேர்தல் தேவைகள், நலன்களுக்காக புலிகள் இயக்கத்தின் பெயரையும், பிரபாகரனின் பெயரையும், மாவீரர்களையும் பயன்படுத்த முற்படுகின்றனர்.

தனிப்பட்ட அரசியல் நலன்கள், கருத்துக்களை தமிழ் மக்களின் மீது திணிப்பதற்கு விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்துவது நல்லதல்ல.

அரசியல், தேர்தல் என்று வந்து விட்டால், அவர்களுக்கு எல்லாம் அது மறந்து போய் விடுகிறது.

எப்படியெல்லாம் புலிகளையும், போராட்டத்தையும், மாவீரர்களையும் விலை பேசலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

தமிழ் அரசியல் பரப்பில் மாத்திரமன்றி, சிங்களத் தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கும் கூட புலிகள் தேவைப்படுகிறார்கள்.

அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மட்டுமல்ல,  முன்னாள் நாடாளுதன்ற உறுப்பினர் அங்கஜனும் கூட சாட்சி.

அவரும் கூட இந்த மண் எங்களின் சொந்தமண் என்று வாக்கு கேட்டதை மறந்து விட முடியுமா?.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22