(செ.தேன்மொழி)

பளை - உடுத்துறை கடற்பகுதியில் ரூபா 78 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்டகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேம்படி - உடுத்துறை கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் புலனாய்வுத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , கடற்படையினரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வேம்படி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீன்பிடி படகொன்றை நிறுத்திவிட்டு , அதிலிருந்த சிலர் தப்பியோடுவதை அவதானத்த கடற்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் படகை சோதனைச் செய்தபோதே இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 13 பொதிகளுக்குள் எடுத்துவரப்பட்ட 52 கிலோ 680 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் , இவை 78 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடையவை என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.