-கார்வண்ணன்

கடந்த 4ஆம் திகதி மாலை, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தைக் கடந்து சென்ற போது,  33 ஆண்டுகளுக்கு முந்திய நினைவுகள் கண்முன் தோன்றின.

1987ஆம் ஆண்டு “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையின் மூலம், வடமராட்சியை இராணுவத்தினர் கைப்பற்றி, சுமார் ஒரு மாதம் தான் கடந்திருந்தது.

ஜூலை 5ஆம் திகதி இரவு 8 மணியைத் தாண்டி சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. முற்றத்தில் பேசிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், கிழக்கு வானில் நெருப்புப் பிளம்பு போன்ற ஒரு பேரொளி எழுந்தது.

சற்று நேரத்தில் பாரிய வெடிப்பினால் வடமராட்சி அதிர்ந்தது. அத்தோடு, சிறிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

என்ன ஏது என்று அறிந்து கொள்ள, அப்போது எந்த தொடர்பாடல் வசதியும் இல்லாத அந்த தருணத்தில், பீதியுடன் உறங்கச் சென்றவர்களுக்கு மறுநாள், வடமராட்சிக்குள் மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் என்ற செய்தியே கிடைத்தது.

ஆங்காங்கே, புலிகளின் சிறிய அணிகளாக, ஆயுதங்களுடன் வீதிகளில் நின்றனர். அப்போது வடமராட்சியின் சில பகுதிகள் புலிகளின் தற்காலிக கட்டுப்பாட்டில் வந்திருந்தன.

எல்லோரையும் வடமராட்சியை விட்டு வெளியேறுமாறும் புலிகள் கேட்டுக் கொண்டனர். அதையடுத்து, மூட்டை முடிச்சுகளுடன், வடமராட்சியை விட்டு வெளியேறத் தொடங்கினர் மக்கள். வல்லை வெளியைத் தாண்டிச் செல்வது ஆபத்தானது. அதுவும் வீதியால் செல்ல முடியாது.

கடும் வெளியிலில் காய்ந்து போய்க் கிடந்த தொண்டைமாறு கடல் நீரேரியின் ஊடாக நடந்து, ஆயிரக்கணக்கான மக்கள் தென்மராட்சிக்கும், வலிகாமத்துக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.

சில வாரங்களிலேயே, இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக, எல்லோரும் மீண்டும் வடமராட்சிக்குத் திரும்பியதும், யாழ்ப்பாணத்தில் ஒரு சுற்றுலா கலாசாரம் பரவியது.

ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையால் சேதமடைந்த கட்டடங்கள், இராணுவ முகாம்கள், காவலரண்களை பார்வையிடுவது அப்போது ஒரு பொழுது போக்காக மாறியிருந்தது.

குடும்பம் குடும்பமாக சேர்ந்து வாகனங்களை வாடகைக்குப் பிடித்தும், சைக்கிள்களிலும், உலா வருவது, கொஞ்ச நாட்களாக ஒரு வழக்கமாக இருந்தது.

அப்போது நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் தான் எல்லோரும் பார்க்க ஓடிய முதல் இடம்.

அது கரும்புலி மில்லரின் குண்டு லொறியினால் சின்னாபின்னமாகி கிடந்தது.

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக, இருந்த மாடிக் கட்டடம் வரை, ஓட்டிச் சென்று அந்த லொறியை வெடிக்க வைத்திருந்தார் மில்லர்.

இராணுவ முகாமாக இருந்த, அந்தப் பாடசாலைக் கட்டடங்கள் சிதைந்து போய்க் கிடந்தன. மில்லர் ஓட்டிச் சென்ற லொறியின் இரும்புச் சட்டங்கள் சுருண்டு போய் கிடந்தன.

பாடசாலைக்கு முன்பாகவும், பக்கங்களிலும் இருந்த வீடுகள், ஆலயம் என்பன கூரைகளை இழந்தும், குண்டுச் சிதறல்கள் துளைத்தும், புழுதிகள் படிந்தும் காட்சியளித்தன.

Nelliady Madhya Maha Vidyalayam : RouteLanka.com

33 ஆண்டுகளுக்கு முன்னர் அது, எல்லோருக்கும், ஆச்சரியம் தரும் பேரழிவுக் காட்சியாக இருந்தது.

பிற்காலங்களில், இதைவிட பேரழிவு ஏற்படுத்திய தாக்குகல்கள், நிகழ்ந்திருந்தன.

ஆனாலும், அப்போது நெல்லியடி முகாம் தாக்குதல் விழியை உயர்த்தி வியப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.

நீண்டகாலமாக சிதைவுகளுடன் இருந்த அந்த பாடசாலை, இப்போது புதுப்பொலிவுடன் இருக்கிறது.

அந்த தாக்குதலுக்கான எந்த தடயமும் அங்கே இல்லை. இரண்டு முறை அமைக்கப்பட்ட மில்லரின் சிலைகளும் இல்லை.

ஆனாலும், அந்த தாக்குதல் இன்னமும் நினைவில் இருக்கிறது. அது மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இராணுவத்தினருக்கும் கூட.

மில்லரின் தாக்குதல் நடந்த “ஜூலை 5” பின்னர் கரும்புலிகள் தினமாக மாறியது. புலிகளின் காலத்தில், இந்த நாளில் பெரியளவில் நிகழ்வுகள் நடப்பது வழக்கம்.

இப்போது வெளிப்படையான நிகழ்வுகள் இல்லாவிடினும், அந்த நாள் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் நினைவு கூரப்படுகிறது.

கடந்த ஜூலை 4ஆம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தைக் கடந்த போது, மறுநாள் மில்லரின் நினைவு நாள் என்பதோ, கரும்புலிகள் நாள் என்பதோ நினைவில் வரவில்லை.

ஆனால் 33 ஆண்டுகளுக்கு முன்னர், சிதைந்து போய்க் கிடந்த அந்தப் பாடசாலை, நினைவுக்கு வந்தது.

திக்கம் நோக்கி சற்று தூரம் சென்றதுமே, வதிரியில் வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்த காட்சி ஏதோ ஒன்று இருப்பதை நினைவுபடுத்தியது.

அதற்குப் பின்னர் தான் இது கரும்புலி நாள் காய்ச்சல் என்பதை உணர முடிந்தது.

மறுநாள், ஜூலை 5ஆம் திகதி வடமராட்சியில் மட்டுமன்றி, வடக்கு மாகாணம் முழுவதுமே, இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வடமராட்சி கிழக்கு நாகா்கோவில் ...

வீதிகளில் புதிய சோதனைச் சாவடிகள் முளைத்திருந்தன. வழக்கத்தை விட அதிகளவு படையினர் ரோந்து சென்றனர். பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கிளிநொச்சியில் அக்கராய மன்னின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற பிரதேசசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது என்று கூறிக் கொண்டே, முன்னாள் எம்பி சிறிதரன் விசாரிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவகம் முற்றுகையிடப்பட்டு தேடப்பட்டது.

இவ்வாறாக ஜூலை 5ஆம் திகதி நீண்ட நாட்களுக்குப் பிறகு பரபரப்பாக – பதற்றமான ஒரு நாளாக காணப்பட்டது.

முன்னர் கரும்புலிகள் நாள் நெருங்குகிறது என்றால், கொழும்பில் “காய்ச்சல்” வந்து விடும்.

அதனை அண்டிய முன் இரு வாரங்களும், பின் ஒரு வாரமும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் கொழும்பு தடுமாறும்.

வீதிகளில் திடீர் சோதனைகள், வீடுகளுக்குள், விடுதிகளுக்குள் தேடுதல்கள், விசாரணைகள் என்று கொழும்பு கலங்கிப் போய் விடும்.

காரணம், கரும்புலிகள் தினத்தை நினைவு கூரும் வகையில், புலிகள் எங்காவது நுழைந்து தாக்குதல் நடத்தி விடலாம் என்ற அச்சம் தான்.

அந்த அச்சத்தில் இருந்து கொழும்பு இப்போது விலகி விட்டது. ஆனால் யாழ்ப்பாணமும், வடக்கும் அவ்வாறு இல்லை.

புலிகள் இருந்த காலத்தில் எவ்வாறு கரும்புலிகள் நாள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் இருந்தனவோ, அதே நிலை மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

2015 -2019 காலத்துக்குப் பின்னர், பின்னர், வடக்கு ஒரு முழுமையான இராணுவ முற்றுகைக்குள் வந்திருக்கிறது.

இதுவரையில் வெளிப்படையாகத் தெரியாமல் இருந்த இராணுவப் பிரசன்னம், இப்போது பகிரங்கமானதாக மாறியிருக்கிறது.

சிலருக்கு இது பழக்கப்பட்டு விட்டது. சிலருக்கு இது பதற்றத்தைக் கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால், வடக்கில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், ஒருவித பதற்றமான நிலைக்கு முகம் கொடுக்கும் நிலை வந்திருக்கிறது,

கரும்புலிகள் நாள் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகிறதோ இல்லையோ, அதனை மக்களுக்கு நினைவுபடுத்துவதில் அரச படைகளே முன்னால் நிற்கின்றன.

கரும்புலிகள் தினத்தை கொண்டாட விடக் கூடாது என்பதற்காக, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இராணுவத்தினரே புலிகளையும் கரும்புலிகளையும் மீள நினைவுபடுத்திக் கொள்ளும் நிலையை தோற்றுவித்திருக்கிறார்கள்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரையே தாங்கள் நடத்தியதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது.

அது உண்மையானதாக இருந்திருந்தால், புலிகள் இயக்கத்தின் தலைமையும் அதன் பலமும் அழிக்கப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பின்னரும்,  இவ்வாறான நினைவுகூரலை அரச படைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்காது.