-மீரா ஸ்ரீனிவாசன்

கொழும்பு, இலங்கையில் ஆகஸ்ட் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், இந்தியா குறித்தும்  நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் இந்தியாவின் பாத்திரம் குறித்தும் குறிப்பாக, தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரசாரங்களில் முக்கியமாக பேசப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

   " இந்தியா எம்மை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது. எமது பிரசாரங்களின் போதாமையை சுட்டிக்காட்டும் அவர்கள் நாங்கள் மிகவும் வலிமையான அரசியல் சக்தியாக இருக்கவேண்டும் என்றும் மலையக தமிழ்த் தலைவர்களுடன் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்றும் அவ்வாறானால் மாத்திரமே தங்களால் ( இந்தியா ) இலங்கை மீது நெருக்குதலைப் பிரயோகிக்கக்கூடியதாக இருக்கும் என்று  எமக்கு கூறுகிறார்கள்" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அத்தகைய வலிமையான ஒரு சக்தியாக வரவதற்கு தேர்தலில் கூட்டமைப்பு குறைந்தது 20 ஆசனங்களையாவது கைப்பற்றவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  கூட்டமைப்பு உள்முரண்பாடுகளினால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஒரு நேரத்தில் ஸ்ரீதரன் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கையின் பொதுத்தேர்தல் குறித்து இந்தியா கருத்து எதையும் கூறவில்லை.

   அவரது கருத்து குறித்து ஸ்ரீதரனிடம் கேட்டபோது, " நான் அதை யாழ்ப்பாணத்தில் கூறினேன். கூட்டமைப்பு  ஐக்கியமாக செயற்படவேண்டிய தேவையை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு செய்தேன்.  தமிழ்மக்களின் நியாயபூர்வமான பிரதிநிதிகளாக மீண்டும் நாங்கள் பலத்துடன்  வந்தால் தான் இந்தியாவுடன் பேசக்கூடியதாக இருக்கும் என்பதை உணர்த்துவதும் எனது நோக்கமாக இருந்தது " என்று பதிலளித்தார்.

  2015பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 225ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றது. அதன் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் வந்தார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திடீரென்று பதவி நீக்கியதன்மூலமாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு நெருக்கடியொன்றை உருவாக்கியதை அடுத்து தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச 2018 டிசம்பரில் எதிர்க்கட்சி தலைவராகும் வரை சம்பந்தன் அந்த பதவியை தொடர்ந்து வகித்தார்.

   கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் தற்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கும்  சம்பந்தன் சர்வதேச சமூகமும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தங்களுக்கு ( கூட்டமைப்புை) பின்னால் நிற்பதாக அண்மையில் கூறியிருந்தார். 2019 ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ச பெருவெற்றி பெற்ற உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு மேற்கொண்டவிஜயத்தையும் அடுத்து ஜனாதிபதியும் பிரதமர் மகிந்தவும் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயங்களையும் சுட்டிக்காட்டிய சம்பந்தன் நீதி, சமத்துவம் , கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிப்பாடு இருக்கவேண்டிய அவசியத்தை அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இந்தியா அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தது என்றும் கூறினார்.

டில்லியில் பேச்சுக்கள்

   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் வடக்கில் யாழ்ப்பாணத்தில் நடத்திவரும் சிறியளவிலான பிரசாரக்கூட்டங்களில் (கொவிட் --19 தொற்றுநோய் காரணமாக  பெரிய பிரசாரக்  கூட்டங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்திருக்கிறது ) இந்தியா பற்றி குறிப்பிடுகையில் தற்போதைய தேர்தலை 2010 தேர்தலுடன் ஒப்பிட்டார்." இத்தடவை போன்றே அந்த நேரத்திலும் கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் ( சரத் பொன்சேகா ) தேல்விகண்ட  சூழ்நிலையிலேயே நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டோம். ஆனால், நாம் 14 ஆசனங்களைக் கைப்பற்றினோம். அதைத்தொடர்ந்து அன்றைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டோம். எம்மையும்  ராஜபக்ச அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அந்த சந்திப்பில் வைத்து எமக்கு அவர் ஆலோசனை கூறினார். அதற்குப்பிறகு நாம் 18 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம் " என்று சுமந்திரன் கூறினார்.

  ஆனால், சர்வதேச சமூகமும் இந்தியாவும் தங்களுக்கு பின்னால் நிற்பதாகக் கூறி கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதாக அவர்களின் எதிராளிகள் கண்டனம் செய்கிறார்கள். இதே கருத்து சில சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்படுகிறது. தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி இந்தியா இப்போது பெரிதாக அக்கறைகாட்டுவதில்லை என்றும் இலங்கையில் தனது சொந்த புவிசார் அரசியல் நலன்களை எவ்வாறு பேணுவது என்பதிலேயே புதுடில்லி ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது என்றும் சில பிரிவினர் மத்தியில் அதிகரித்துவரும் அபிப்பிராயத்தின் வழியில் இந்த உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

   மறுபுறத்தில், 1987 இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ( மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஒரேயொரு கணிசமான சட்டமாக அதுவே தொடர்ந்து இருந்துவருகிறது) சுட்டிக்காட்டுகின்ற கூட்டமைப்பு புதுடில்லியின் பாத்திரம்  முக்கியமானது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

    அதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் கொடுப்பதற்கு கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்களும் எதிரணிக்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யும் காட்டிய எதிர்ப்பையடுத்து மூண்ட அண்மைய சர்ச்சையிலும் இந்தியா பற்றி தீவிரமாக பேசப்பட்டது. " தேசிய சொத்துக்களை " வெளிநாடுகளுக்கு விட்டுக்கொடுப்பது என்பது எப்போதுமே சிங்கள தென்னிலங்கையின் தேசியவாத குழுக்களின் கண்டனத்துக்குரிய விடயமாக இருந்துவருகிறது.

  தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னைய அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டதைப் போன்று தெற்கின் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுடன் கூட்டாக அபிவிருத்தி செய்யப்படமாட்டாது என்பது புதுடில்லிக்கு தனது அரசாங்கத்தினால்  தெரியப்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறியிருக்கிறார்."இந்தியாவுக்கான  எனது பெப்ரவரி விஜயத்தின்போது விமானநிலையத்தை தயவுசெய்து  எடுக்கவேண்டாம் என்று அவர்களுக்கு நான் கூறினேன் "என்று பிரதமர் ராஜபக்ச கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை மேற்கோள் காட்டியிருக்கிறது.

(த இந்து)