(ஆர்.ராம்)

வடக்கு, கிழக்கு மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவகம் (ராடா) ஊடாக அரச பணத்தை மோசடி செய்தார்கள் எனும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டாவது பிரதிவாதியான அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக  தெரிவித்துள்ளார். 

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் வீடமைப்பு திட்டங்களை அமுல் செய்வதற்காக அரசாங்கத்தால் ராடா எனும் வடக்கு, கிழக்கு மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவகத்துக்கு வழங்கப்பட்ட 124 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக அந்நிறுவகத்தின் முன்னாள் தலைவர் டிரான் பிரசன்ன கிறிஸ்தோபர் அலஸ், அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன், ரொஹான் சாலிய அபேசிங்க விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகிய நால்வருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் நேற்று முன்தினம் சாட்சியாளரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட நால்வரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு அன்டனி எமில் லக்ஷ்மி காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை, வெளிநாட்டு பயணத் தடைகள், அனைத்தும் மீளப்பெறப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே, வெளிநாடொன்றில் இருக்கும் அன்டனி எமில் லக்ஷ்மி காந்தன் கருத்து வெளியிடுகையில், 

நான் விரைவில் நாடு திரும்பவுள்ளேன். நீண்டகாலமாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளின் இறுதியில் நீதிநிலை நாட்டப்பட்டுள்ளது. இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சத்தியங்கள் ஒருபோதும் சாவதில்லை. என்னையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட களங்கப்படுத்தும் பிரசாரங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.