(ஆர்.ராம்)

அமெரிக்கவுடன் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையொப்பமிடப்போவதில்லை என்று அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து மீளாய்வு குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை அமைச்சர்கள் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதோடு தனிப்பட்ட கருத்துக்களையும் வழங்குமாறு கோரியுள்ளார். 

இந்த செயற்பாடானது, எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துற்கான முன் முயற்சியா என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராமேஷ் பத்திரணவிடம் வினவியபோது, அவர் எம்.சி.சி.ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடமாட்டாது என்று உறுதிபடக் குறிப்பிட்டார். 

அதுமட்டுமன்றி, நாட்டிற்கு பாதகத்தினை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தங்களிலும் அரசங்கம் கையொப்பமிடப்போவதில்லை என்றும் மீளாய்வுக்குழுவின் அறிக்கையை அமைச்சர்கள் வாசிக்குமாறு ஜனாதிபதி கோரியமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கையாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை,போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் காணி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெறும் வகையிலான எம்.சி.சி. ஒப்பந்தத்திற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து வருவதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எம்.சி.சி.யின் இலங்கை பணிப்பாளர் ஜெனரல் எட்ல்மன் கூறியிருந்தார்.

எனினும், எம்.சி.சி. நிதி உதவிக்கான கால எல்லை கிடையாதென இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வென்ஹோர்ன் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் எம்.சி.சி.ஒப்பந்தமானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கைச்சாத்திடப்படும் என்றும் அவ்வாறு கைச்சாத்திடப்படும் பட்சத்திலேயே அரசாங்கம் பொருளாதார சவால்களிலிருந்து ஓரளவேனும் மீளமுடியும் என்றும் அரசியல், பொருளாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.