சூடு பிடித்திருந்த தேர்தல் பிரசாரம் சற்று தணிந்த நிலையில் கொரோனா விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால் எங்கே மீண்டும் ஊரடங்கு சட்டம் வருமா ? ஊர் முடக்கம் ஏற்படுமா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இவற்றுக்கு மத்தியில் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது. மக்கள் மத்தியில் தோன்றியுள்ள அச்சமும் வதந்திகளும் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகின்றன.

இதேவேளை வதந்திகளைப் பரப்பக் கூடாது என்றும் அவ்வாறு போலியான  வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

முகப்புத்தக பாவனையாளர்களையும் சமூக ஊடகப் பிரியர்களையும் கைபேசியே கதியென இருப்போரையும் இது எந்த அளவில் கட்டுப்படுத்தும் என்று  கூறுவதற்கில்லை .

 

இதேவேளை சில திட்டமிட்ட குழுவினர் வைரஸ் பரவல் தொடர்பில் போலியான பிரச்சாரங்களை பரப்பி மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்  .

மேலும் கொரோனா வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவற்றுக்கு மத்தியில் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு பயிற்சி வழங்கவென சென்ற  ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும்   அவரது இரு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜாங்கனை பகுதியில் 70 சிறுவர்கள் உட்பட 300 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்  .

நேற்றைய தினம் மாத்திரம் 303 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் சாத்தியம் உள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்ததையடுத்து உலக சுகாதார நிறுவனம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது  .

நிலைமையை அவதானித்து கவனமாக இருக்க வேண்டியது மக்களின் கடமையாகும். முதலாவது கொரோனா அலையில் தப்பிவிட்டு ;  இரண்டாவது அலையில் அடித்துச் செல்லப்படாது ;  நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்