கொரோனா வைரஸை விடக் கொடிய "அறியப்படாத நிமோனியா காய்ச்சல்" ஒன்றின் பரவலை கசகஸ்தான் சந்தித்து வருவதாக சீனா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் கசகஸ்தானில் இருக்கும் சீனத் தூதரகம் தனது நாட்டுப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவித்துள்ளது.

எனினும் சீனா அதிகாரிகளினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது உண்மைக்கு புறம்பானது என கசகஸ்தான் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்த உலக சுகாதார ஸ்தாபனம், கசகஸ்தானில் நிமோனியா பரவி வருவதாக கூறப்படுவதை தாங்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்தது.

கசகஸ்தானில் கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உறுதிசெய்யப்படாத கொரோனா வைரஸ் நோய்த்தொற்றே இருக்கக் கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரயான் தெரிவித்துள்ளார்.