இன்றைய இளைஞர், யுவதிகள் நவீன தொழில்நுட்ப பாவனையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இணையத்தினூடாக ஒருவர் கேலி செய்யப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ, அல்லது பாரபட்சத்திற்குள்ளாக்கப்பட்டாலோ அது இணையத்தினூடான சுரண்டல் மற்றும் வன்முறை என அழைக்கப்படும். மேலும் கூறுவதாயின் நேர்மையற்ற முறையில் தவறாகவோ அல்லது உண்மைக்குப் புறம்பாகவோ தகவல்களைத் தந்து அதன் மூலம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கும். இணையத்தினுடான சுரண்டலை இல்லாதொழிப்பதன் மூலம் சமூக ஊடகத்தை வினைத்திறன்மிக்கதாக்க அனைவரும் முன்வருவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

சர்வோதய சாந்திசேன ஏற்பாட்டில் இளைஞர் அமைப்பிற்கான செயலமர்வு மட்டக்களப்பு சர்வோதய கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (09.07.2020) நடைபெற்றது. இவ் இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வின் போது வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்த அப்துல் அஸீஸ், மேலும் கருத்து தெரிவிக்கையில்

 ‘ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஒருவருக்கொருவர் பகிருதல் பிரசுரித்தல் என்பனவே இன்று நடந்தேறி வருகின்றது. அத்துடன் தங்களுக்கென இணைய சமூகங்களை உருவாக்கி இணையத்தினூடான சுரண்டல் கேலிகள்  செய்வதன் மூலம் வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. 

தனிப்பட்ட நபர் மீதான கோபத்தினை தணித்துக் கொள்ள குறிப்பிடப்பட்ட நபரின் பாலியல் சார் அல்லது ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை பிரசுரித்து பொதுமக்கள் முன் அவமானப்படுத்தும் செயலையே இப்போது அதிகமானவர்கள் செய்து வருகின்றனர். இதனால் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகிப் போகின்றன. குறிப்பாக இளம் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களி;ன் படங்களை முகநூலில் பெற்று அதனை வடிவமைத்து மற்றுமோர் புரளியினை ஏற்படுத்தி வருவதால் எமது பிரதேசங்களில் எத்தனையோ வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.  முகம் தெரியாத நபர்களிடம் வீட்டு முகவரி, தொலைபேசி, அலுவலக முகவரி, போன்ற தகவல்களை பகிர்தல், சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்த்தல் அவர்கள் நேரில் அழைக்கும் போது அறிமுகமற்ற நபரை சந்திப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்பன இன்று பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் இணையத்தினூடான சுரண்டல் மற்றும் வன்முறையை ஏற்படுத்துவோரை தண்டிக்க சட்டங்கள் காணப்படுகிறது. 1995ம் ஆண்டின் திருத்தப்பட்ட 22ம் இலக்கச் சட்டம், 1998ம் ஆண்டின் திருத்தப்பட்ட 29ம் இலக்கச் சட்டம் மற்றும் 2006ம் ஆண்டின் திருத்தப்பட்ட 16ம் இலக்கச் சட்டம் ஆகியவற்றில் உள்ளபடி, அதன்படி உடல்காட்டும் போக்கு மற்றும் கீழ்த்தரமான பிரசுரிப்புக்கள் போன்றன சட்டப்படி குற்றமாகும் எனக் கூறப்பட்டுள்ளதற்கிணங்க இவற்றுக்கான பரிகாரத்தினை பெறமுடியும்’ எனவும் தெரிவித்தார்.