ராஜாங்கனை கொரோனா தொற்றாளர் மரணச்சடங்கிலும் கலந்துகொண்டுள்ளார் ; 11 வயது, ஒன்றரை வயதுடைய அவரது பிள்ளைகளுக்கும் தொற்று - விபரம் இதோ ! 

11 Jul, 2020 | 09:13 PM
image

(நா.தனுஜா)

ராஜாங்கனைப் பகுதியில் நபரொருவருக்கும், 11 வயது மற்றும் ஒன்றரை வயதுடைய அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் முகாமிற்கு ஆலோசனை வழங்கலுக்காக வந்துபோயுள்ளமை தெரியவந்திருக்கும் நிலையில், தொற்றுக்குள்ளான 11 வயது பிள்ளையுடன் கல்வி பயின்ற 70 சிறுவர்கள் உள்ளடங்கலாக 300 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப்படைகளின் பிரதானி இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக இனங்காணப்பட மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாதுள்ளமையினால் முகக்கவசங்களை அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணல் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக கொவிட் - 19 கொரோனா வைரஸ் சமூகப்பரவலாக மாறுவதைத் தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

இராஜகிரியவிலுள்ள கொவிட் - 19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்

இலங்கையில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடையாளங்காணப்பட்டார். அதனையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனூடாக சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இறுதி நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கண்டறியப்பட்டதுடன், அதன் பின்னர் கடற்படையினர் மத்தியிலும் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்களிலுமே தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க மீண்டும் இம்மாதம் 7 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களல்லாத ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்தே, தற்போது அதன் தொடர்ச்சியான புதிதாக நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டு வருகின்றனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் கந்தக்காடு பிரதேசத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் இரு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் இயங்கிவருகின்றன.

அவற்றில் ஒன்று கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையம் என்றும், மற்றையது சேனபுர போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையம் என்ற பெயரிலும் இயங்கிவருகின்றன.

இவற்றில் கடந்த முதலாம் திகதி கொழும்பில் வழக்கொன்றுக்காக கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவருக்கு, வழக்கு விசாரணைகள் முடிவடைந்து திருப்பியனுப்ப முன்னர் கடந்த 3 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவருடன் வெலிக்கடை சிறைச்சாலையில் தங்கியிருந்த கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அங்கு எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேபோன்று கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையத்திலுள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 53 பேர் தொற்றுக்கு உள்ளாகியமை கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இவர்களில் புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த மாரவில நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் தொடர்புகளைப் பேணியோருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் பொதுப்போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தியிருப்பினும், எப்போதும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையிலேயே பயணம் செய்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

தனிமைப்படுத்தல் முகாமை வைத்தியசாலையாக மாற்றியமைக்குக் காரணம்

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி 196 பேரும், மாலையில் மேலும் 87 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து இதுவரைகாலமும் கந்தக்காட்டில் இராணுவத்தினரால் இயக்கப்பட்டுவந்த தனிமைப்படுத்தல் முகாம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் கண்டறியப்பட்ட நோயாளர்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்தும் பல்வேறு தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது. புனர்வாழ்வளித்தல் நிலையத்திலிருந்தவர்கள் கைதிகள் என்பதால் அவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றும்போது விசேட பாதுகாப்பு வழங்கவேண்டிய தேவையேற்படும். அதேபோன்று போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்பவர்களின் செயற்பாடுகள் திடீரென்று வித்தியாசமானதாக, கணிக்கமுடியாததாக இருக்கும் என்ற காரணத்தாலேயே தனிமைப்படுத்தல் முகாமை வைத்தியசாலையாக மாற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இந்தப் போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையங்களில் நிர்வாகசேவையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலர் அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்தனர்.

அவர்களில் பெருமளவானோர் மீண்டும் புனர்வாழ்வளித்தல் முகாமிற்கே அழைத்து வரப்பட்டிருப்பதோடு, அவர்களது குடும்பத்தினரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை புனர்வாழ்வளித்தல் நிலையங்களில் உள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்களுக்கு மாதமொருமுறை அனுமதி வழங்கப்படும்.

எனினும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து அனுமதி வழங்கப்படாமையினால், கடந்த மேமாதம் 4 ஆம் திகதி புனர்வாழ்வு பெற்றுவருபவர்களைப் பார்வையிடுவதற்கு 116 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜாங்கனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று

இந்நிலையில் ராஜாங்கனைப் பகுதியில் நபரொருவருக்கும், அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பணியாற்றி வந்த அநுராதபுரம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து இம்மாதம் முதலாம் திகதி ஆலோசனை சேவைகளை முன்னெடுப்பதற்காக கந்தக்காடு புனர்வாழ்வளித்தல் முகாமிற்கு வருகைதந்திருக்கிறார். பின்னர் அதனை முடித்துக்கொண்டு மீண்டும் 2 ஆம் திகதி காலை அநுராதபுரத்திற்குச் சென்றிருக்கிறார்.

எனினும் அன்றைய தினமே தனது பணியிடத்திற்குச் செல்லாமல், ஒரு மரணச்சடங்கிற்காக அவர் வசிக்கும் ராஜாங்கனைக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு 11 வயது மற்றும் ஒன்றரை வயதுடைய அவரது பிள்ளைகள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவருடைய 11 வயதுடைய பிள்ளை ஐந்தாம் தரத்தில் கல்விகற்பதால் கடந்த 7 ஆம் திகதி அதே பிரதேசத்திலுள்ள வகுப்பொன்றுக்குச் சென்றிருக்கிறார். அதில் சுமார் 70 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். ஆகவே அவர்களைக் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறோம். அதேபோன்று மேற்படி நபர் சென்ற மரணச்சடங்கில் சுமார் 150 பேர் வரையில் கலந்துகொண்டனர். அதற்கு மறுநாள் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். அவர்களையும் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தகவல்களை மறைக்கவேண்டிய அவசியமில்லை

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவிருப்பதாகவும், சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டறியப்பட்டிருப்பதாகவும் பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. கந்தக்காட்டில் மீண்டும் புதிய நோயாளிகள் இனங்காணப்பட மாட்டார்கள் என்று உறுதியாகக்கூற முடியாவிடினும், இது சமூகப்பரவலாக மாறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தகவல்களையும் மறைக்கவேண்டிய தேவை எமக்கில்லை. உறுதிப்படுத்தப்பட்ட உண்மையான தகவல்களை அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் ஊடாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். அவற்றில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

மேலும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாட்டுமக்களே எமக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அதேபோன்று தற்போதும் முகக்கவசங்களை அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல், உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றல் ஆகியவற்றின் ஊடாக சமூகப்பரவல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வெளிநாட்டிலிருந்து வருகைதந்த இலங்கையர்களில் தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். எனவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27