(இராஜதுரை ஹஷான்)

முத்துறைக்குமிடையில்  அதிகார முரண்பாட்டை தோற்றுவித்துள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக மாற்றி நாட்டுக்கு பொருந்தும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவது புதிய அரசாங்கத்தின்  பிரதான செயற்பாடு.  விருப்பு வாக்கு முறைமை தேர்தல் திருத்தத்தின் சாபக்கேடு என பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி . எல். பீறிஸ் தெரிவித்தார்.

மாத்தறையில்  இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப்பெறும்.  அந்த  வெற்றி  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமானதாக  இருக்க வேண்டும்.  பெரும்பான்மை  ஆசனங்களை பெற்றால்  மாத்திரமே  பல  பிரச்சினைகளுக்க தீர்வை  காண முடியும்.  குறைவான  ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு பிற  கட்சிகளின்  ஆதரவை  கோரும் போது    அவர்களின் நிபந்தனைகளுக:கு அடிபணிய நேரிடும்.

நிபந்தனைகளுக்கு அடிபணியும்  பட்சத்தில் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும்  இதனை கடந்த கால   அரசாங்கத்தின்  நிலவரங்கள் ஊடாக அறிந்துக் கொள்ளலாம். பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்து பல   விடயங்களை திருத்திக் கொண்டால் மாத்திரம்.   சிற்நத அரச  நிர்வாகத்தை கட்டியெழுப்ப முடியும்.

நல்லாட்சி அரசாங்கம் ஒரு  குடும்பத்தை இலக்கு வைத்து அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை கொண்டு வந்தது. இத்திருத்தம் எந்தளவிற்கு  முத்துறைக்குமிடையில் முரண்பாட்டை  தோற்றுவிக்கும்  என்பதை கடந்த கால  சம்பவங்கள் ஊடாக அறிந்துக் கொள்ளலாம்.     நாட்டிற்கு  தற்போது புதிய அரசியலமைப்பு  அவசியமாகவுள்ளது.   புதிய அரசாங்கத்தில்  19வது திருத்தம் நீக்கப்பட்டு      முரண்பாடற்ற விதத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

தேர்தல் முறைமையில் விருப்பு  வாக்கு முறைமை  ஒரு சாபககேடு என்று குறிப்பிட வேண்டும்   இணக்கமாக செயற்படும் கட்சிக்குள்ளும்  விருப்பு வாக்கு  முறைமை  முரண்பாட்டை  தோற்றுவிக்கும். ஆகவே புதிய அரசாங்கத்தில் விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டு  முரண்பாடற்ற தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும்.    பொதுஜன  பெரமுன மீது மக்கள் கொண்டுள்ள  நம்பிக்கை  , எதிர்பார்ப்பு ஆகியவற்றை   நிறைவேற்ற வேண்டுமாயின்  மூன்றில்  இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும்.   ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை   பொதுஜன பெரமுனவிற்கும்  வழங்குங்கள்  என்றார.