(எம்.மனோசித்ரா)

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2600 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய வெள்ளிக்கிழமை மாத்திரம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 19 முறைப்பாடுகளும் , மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 103 முறைப்பாடுகளுமாக மொத்தமாக 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேசிய மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களில் 2620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனினும் இதுவரையில் தேர்தல் வன்முறை தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.