(நா.தனுஜா)

மத்திய வங்கியின் சௌபாக்கியா கொவிட் - 19 புத்துயிர்ப்பு கடன் வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் வைரஸ் பரவலினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு 4 சதவீத வட்டியில் உரிமம்பெற்ற வங்கிகளின் ஊடாகத் தொழிற்படு மூலதனக்கடன்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மத்திய வங்கியினால் 2020 ஜுலை 10 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6,978 மில்லியன் ரூபா தொகை கொண்ட 2,066 புதிய கடன்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுடன், சௌபாக்கியா கொவிட் -19 புத்துயிர்ப்பு செயற்திட்டத்தின் கீழ் 60,250 மில்லியன் ரூபா கொண்ட 22,306 கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மத்திய வங்கி கொவிட் - 19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு 4 சதவீத வட்டியில் (ஆண்டிற்கு) உரிமம்பெற்ற வங்கிகளின் ஊடாகத் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்கியா கொவிட் - 19 புத்துயிர்ப்பு கடன் வழங்கல் செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு உதவியாக அமைந்துள்ளது.

இக்கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உட்பட ஒரு பில்லியன் ரூபாவிற்கும் குறைவான ஆண்டு மொத்தப் புரள்வினைக் கொண்ட கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும். ஆண்டு மொத்தப் புரள்வான இவ்வரையறை சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை வழங்கும் தொழில்களுக்கு ஏற்புடையதாகாது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட தொழில்களும், தனிப்பட்டவர்களும் மேற்குறிப்பிட்ட கடன் திட்டங்களின் கீழ் தமது கடன் விண்ணப்பங்களைக் குறித்த வங்கிகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.