(நா.தனுஜா)

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் சட்டத்தரணிகளின் தொழில்சார் உரிமைகளை மீறும்வகையிலான நடைமுறைகளைத் திருத்திக்கொள்வதற்கு விரைந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில், சட்டத்துறை உறுப்பினர்களின் தொழில்சார் உரிமைகள் மீறப்பட்டமைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்திருக்கிறது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தி சட்டத்தரணிகள் சங்கத்தினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும் சட்டத்தரணிகளின் தொழில்சார் உரிமைகளை மீறும்வகையிலான நடைமுறைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் பலரிடமிருந்தும் எமக்குப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

சட்டத்தரணிகள் அவர்களது கடமைகளைச் செய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். மிக அவசியமான தேவைகள் தவிர்த்து அவர்கள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது. சட்டத்தரணிகள் சிறைச்சாலைகளுக்குள் நுழைவதால் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கப்பட்டிருப்பதாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் பதிவாகவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனைவிடவும் சட்டத்துறைசார் அதிகாரிகளை அதற்குரிய கௌரவத்துடனும், மரியாதையுடனும் நடத்துவது அவசியமாகும்.

மேலும் சிறைச்சாலைகளுக்குள் அவசியமேற்படுத்தும் பட்சத்தில் சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதிகளுடன் தனியாகக் கலந்துரையாடுவதற்கும், விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் விசேட அதிரடிப்படையினரோ அல்லது சிறைச்சாலை அதிகாரியோ அருகிலிருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இவற்றைத் திருத்திக்கொள்வதற்கு விரைந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில், சட்டத்துறை உறுப்பினர்களின் தொழில்சார் உரிமைகள் மீறப்பட்டமைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.