(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலி பிரசாரங்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்  பரவல் அதிகரித்துள்ள நிலையில் , மக்கள் மத்தியில் வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் பதற்ற நிலைமை தோற்றம்பெற ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் சில திட்டமிட்ட குழுவினர் வைரஸ் பரவல் தொடர்பில் போலி பிரசாரங்களை பரப்பி மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சில குழுவினர் திட்டமிட்ட முறையில் வைரஸ் தொற்றாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு போலி பிரசாரங்களை பரப்பி வருவதுடன் , அதனை சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறான போலி தகவல்களை கண்டு மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

வைரஸ் பரவல் தொடர்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினால் வெளியிடப்படும் தகவலையும் , அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல்களை மாத்திரமே மக்கள் நம்பிச் செயற்பட வேண்டும்.  

இவ்வாறான போலி பிரசாரங்களை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன் , இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.