இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த 15 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வாக்களிக்க 1,50,44490 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தபோதும் 1,16,84098 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்த நிலையில் இவர்களிலும் 5,17173 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் 33,60392 பேர் வாக்களிப்பில் ஆர்வமின்றி இருந்துள்ளனர் .இந்தளவு தொகை வாக்குகளானது ஒரு தேர்தலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதென்பதனை இவர்கள் தெரியாதிருந்துள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது. 

வாக்களிப்பது எமது  கடமை மட்டுமல்ல, எமது உரிமையும்கூட. அதாவது வாக்குரிமை என் வாழ்வுரிமை என்று கூட சொல்லலாம் இந்த நாடு நமக்கு அளித்த இந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமை.

நம்மை 6ஆண்டுகள் யார் ஆளப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் எமது வாக்குரிமை என்னும் ஆயுதத்தை நாம் பயன்படுத்தத் தவறக்கூடாது.இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை உள்ள எஜமானர்கள், வாக்காளர்களாகிய நாம் தான். .நம்மை யார் ஆளப் போகிறார்கள் என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரத்தை விரல் நுனியில் எழுதப் போகும், இந்த நாட்டிற்கான  தீர்ப்பை நாம் ஒரு நாள் நீதிபதிகளாக இருந்து எழுத மறுக்கக்கூடாது. 

நான் சுயமாக உழைக்கிறேன், சுயமாகச் சம்பாதிக்கிறேன், சுயமாக என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டேன், அப்படி இருக்கும்போது  அரசின் உதவி எனக்கு எப்போதும் தேவையில்லை. அவ்வாறிருக்க நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சிலரது மனமும், இன்னொரு சாராரோ குறிப்பாக இளம் தலைமுறையினர் மாற்றம் வேண்டும் என்றுமுழக்கமிடும்  அதே வேளையில்,  தங்களது பேஸ்புக்  மீம்ஸ்களின் மூலம் மட்டுமே திருப்தி அடைந்து கொள்வதுடன் நின்று விடுவதனூடாக ஒரு புதிய ஜனநாயகப் பாதையை அமைப்பதற்கும், அதைச் செப்பனிடுவதற்கும் தவறி விடுகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. 

ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் ஆடையில்  இருந்து, சொப்ட்வேர் பொருட்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு ஓர் இன்றியமையாததாக இருக்கிறது.

ஆகவே, அவற்றைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்றால் வாக்குரிமையை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டும்.வாக்களிக்கும்போது எனது பிரதிநிதியை தீர்மானிக்கும் தகுதி  வாக்காளர் என்ற ரீதியில் எனக்கிருப்பது  பெருமைக்குரியது.  இந்த நாட்டில் எனக்கான பிரதிநிதியை,எனக்கான அரசை  தீர்மானிப்பதாக எனது வாக்குரிமையை பயன்படுத்துவதில் ஏன் நாம் பின்னடிக்கின்றோம். 

சங்ககாலம் முடியாட்சி; நிகழ்காலம் குடியாட்சி. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் குறிப்பிடுவது சங்ககாலத்தில் அது சாத்தியமாகுமா? நிகழ்காலத்தில் அது சாத்தியமாகிறது. ஆகவேதான், நமது உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒரு தருணமாகவே இதை நாம் பார்க்க வேண்டும்.   

ஒரு திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைவதற்கு நாமும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தோம் என்பது சமகாலத்தில், நீண்ட ஜனநாயகத்தேரை இழுத்துச் செல்வதில், நமக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதை உணரச் செய்யும் வெளிப்பாடுதான் வாக்களிப்பது என்பதாகும்.

எனக்கு எதற்கு அரசியல்? இதில் எனக்கு விருப்பமில்லை. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, எனக்கு ஒன்றும் கவலையில்லைஎன்பதே வாக்களிக்காதோரின் கருத்தாகவுள்ளது . 100 சதவீத வாக்குப் பதிவைப் பெறுகிறபோதுதான் முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது என்று நாம் எப்போது உணரப் போகிறோம்? சில பேர் நாங்கள் தெளிவான முடிவை எடுக்கிறோம் என்று சொல்லி வாக்களிக்காமல் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

திறமையான ஒரு வேட்பாளரை, நாங்களே  தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் திறமையான  வேட்பாளரை ஊக்குவிப்பதும் மக்கள் பணி செய்கிற சேவகரை அடையாளப்படுத்துவதும், நமது பங்கு என்பதையும், நமது உரிமை என்பதையும்  ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. 

நாம் வாக்களித்தவர்கள் வெற்றி பெற்ற பிறகு,  நம்முடைய வீதிக்கே வருவதில்லையே என்று சில குரல்கள் கேட்பதுண்டு. அப்படி இருக்கையில், நாம் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதும், இல்லை அது தவறு, நமது கடமையை செய்துதானே ஆகவேண்டும் என்று சிலரும் கூறுவதுண்டு.

வாக்களிக்காமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால், கால்வாய் சரியில்லை,வீதி சரியில்லை, போக்குவரத்து வசதிகள் கிடையாது, எமது கிராமத்துக்கு அபிவிருத்தி இல்லை  என்று புலம்பினால் சரியாகி விடுமா என்று கேட்பவர்களும் உண்டு. சரி, வாக்களித்தால் மட்டும் இவை எல்லாம் சரியாகி விடுமா? ஆமாம், நாம் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள்தான், அரசின் திட்டங்களை தான் தேர்ந்தெடுத்த பகுதிகளுக்குக் கொண்டு வருவார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

 வாக்குரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அதனை கட்டாயமாக்க முடியாது. ஏனெனில், வாக்களிப்பது எப்படி ஒருவரின் உரிமையோ, அதே போன்று வாக்களிக்காமல் இருப்பதும் அவரின் உரிமையே என்று சிலர்முழக்கமிடுவதும் உண்டு.

பெரும்பாலும் படித்தவர்கள் பக்கம் இருந்தே இந்தக் கருத்து மேலெழுகிறது. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு, படித்தவர்களிடம் இல்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களைக் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்? 

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என ஒட்டுமொத்த அரசியலையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. ஒன்றை நிராகரிக்கவும், ஒன்றை உருவாக்கவும் கூடிய பெரும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அதுவும் முதல் முறை வாக்களிக்க வரும் இளம் வாக்காளர்களிடம் அவை அதிகமாகவே இருக்கின்றன.

எனவே சலிப்பையும், அவநம்பிக்கையையும் ஒதுக்கிவிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தையும் ஜனநாயக உரிமையையும் காக்க வேண்டும்.அதாவது, எதிர்காலத்தைத் தீர்மானிப்பது நமது நிகழ்கால அரசியல். நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி கனவு காண்கிறோமோ, அக்கனவை நிகழ்காலத்து அரசியலோடு கூர்ந்து பொருத்திப் பார்ப்பது உங்கள் விரல் நுனியில் இருக்கும் ''மை''யில்தான் அடங்கியிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் கல்வி, மருத்துவம், உணவு, வேலைவாய்ப்பு என நம் தேவைகள் ஏராளம் உள்ளன. இவை அனைத்தும் நாம் தினமும் வீட்டில் இருந்து விமர்சிப்பதால் மட்டும் கிடைத்துவிடாது. இவை அனைத்தும் நமக்கு தடையின்றி உரிய வகையில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல தலைமையை நாம் கொண்டு வர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்துள்ளனர்.

இனி வாக்களித்தாலும் வரப் போகிறவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை நன்கு சிந்திக்க வேண்டும். மக்கள் தொண்டன் யார்? என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து வாக்களிக்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பதை நன்கு படித்து அவருக்கு குற்ற பின்னணி இருக்கிறதா? இதற்கு முன் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார்? இவரால் நாட்டுக்கோ, மக்களுக்கோ நன்மை இருக்கிறதா  என தெரிந்து அவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டியது நம் கடமை.

எங்கள்  வாக்குகளை எங்கள்  வாழ்வுரிமையாகவும் எங்கள் ஆயுதமாகவும் நாம் பயன்படுத்த வேண்டும். எமக்கு துரோகம் செய்பவர்களை, எம்மை ஏமாற்றுபவர்களை, தண்டிக்கவும், எமக்கு நன்மை செய்பவர்களை,எமக்காகக் குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யவும் 6 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பாவிப்பதிலிருந்து   நாம் ஒரு போதும் தவறி விடக்கூடாது .