கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவினர் நேற்று சீனா சென்றடைந்தனர்.

சீனாவின் வூஹானில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் வேகமாக பரவியுள்ளது.

இந்த ஆட்கொல்லி வைரசால் இதுவரை 1 கோடியே 26 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலகில் 5,62,011 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த வைரஸ் உருவானது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சீனாவுடன் உலக சுகாதார ஸ்தாபனம் சேர்ந்து கொண்டு கொடிய வைரசை பரப்பியதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தி, அந்த அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்தியதுடன். அமைப்பிலிருந்து முறைப்படி அமெரிக்கா வெளியேறிவிட்டது. 

கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் உலக சுகாதார சபையில் உலக நாடுகள், கோரிக்கை வைத்தன.

இதையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சீனா விரைந்துள்ளது.

நேற்று, பீஜிங் சென்ற குழுவினர், அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.