இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் பல இழுவைப்படகுகளின் ஊடுருவல் 'திடீரென்று அதிகரித்திருப்பதாக" இலங்கையின் வடபகுதி மீனவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நிலைவரம் உள்நாட்டுப்போரின் முடிவிற்குப் பின்னர் இலங்கை மீனவர்களின் வாழ்வாதார மீட்சியைப் பாரதூரமாகப் பாதித்த ஒரு பழைய பிரச்சினையை மீண்டும் கிளறுவதாக அமைகிறது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டுக் கரையோரங்களைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாகப் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படும் பெரிய இந்திய இழுவைப்படகுகளுக்குள் அகப்பட்டுத் தங்களது வலைகள் சேதமடைந்திருப்பதாக வடபகுதி மீன்படி அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருக்கிறார்கள். 

மீன்கள் மற்றும் இறால்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை வாரியிழுக்கும் இந்திய இழுவைப்படகுகளினால் தங்களது மீன்பிடிக்கும், கடலை நம்பிய வாழ்க்கைக்கும் ஏற்பட்ட கொடூரமான பாதிப்புக்களினால் அவலங்களைச் சந்தித்த அனுபவத்தைக் கொண்ட வடபகுதித் தமிழ் மீனவர்கள், தங்களது வாழ்வாதாரத்திற்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதாக அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியின் கீழ் தற்போது மீள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இழுவைப்படகுகளின் ஊடுருவலினால் வடபகுதி மீனவர்களுக்கு மேலும் கூடுதல் கஷ்டநிலை ஏற்படும் ஆபத்து தோன்றியிருக்கிறது. இலங்கை - இந்திய மீன்பிடி நெருக்கடி இருநாடுகளின் இருதரப்பு உறவுகளில் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியிருந்தது. இருதரப்பபையும் சேர்ந்த உயர்மட்டங்களிலும், மீனவ சங்கங்களின் தலைவர்கள் மத்தியிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக எந்தப் பயனையும் தரவில்லை. 

இழுவைப்படகுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மிகவும் கடுமையான சட்டங்களை இலங்கை கொண்டுவந்ததுடன், அத்துமீறும் வெளிநாட்டுப் படகுகளுக்குப் பெருந்தொகை அபராதம் விதிக்கும் நடைமுறைகளை அமுல்படுத்தியதையடுத்துக் கடந்த சில வருடங்களாக ஒரு ஓய்விற்குப் பிறகு இந்தியப் படகுகள் தங்களது கரையோரங்களில் மீண்டும் காணப்படுவது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று மீனவத்தலைவர் ஒருவர் கூறினார். 2017 இல் 450 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களை இலங்கைப் படையினர் கைதுசெய்த அதேவேளை, கடல் எல்லைகளை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 2018 இல் 156 பேரை மாத்திரமே கைது செய்திருந்தனர். 2019 இல் மொத்தமாக 210 பேர் கைது செய்யப்பட்ட அதேவேளை 2020 இல் இதுவரையில் 34 பேர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டனர். 

'ஆனால் இப்போது இந்திய இழுவைப்படகுகள் மீண்டும் வரத்தொடங்கியிருக்கின்றன. எமது பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பல இலட்சம் பெறுமதியான வலைகளை இழந்திருக்கின்றார்கள்" என்று பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவரான வைத்திப்பிள்ளை அருள்தாஸ் கூறினார். இருநாடுகளின் மீனவத்தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் இவர் பங்கேற்றிருக்கிறார். கடந்த சில நாட்களில் வலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து குறைந்தது 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அத்தகைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தந்த தகவல்களின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. 

தனது பகுதி மீனவர்கள் வழமையாக பிற்பகல் 2.30 மணியளவில் கரையிலிருந்து புறப்பட்டு கடலுக்குச் செல்வதாக யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த மீனவத்தலைவரான ராஜா சந்திரன் கூறினார். 'நாம் எமது வலைகளை விரித்துவிட்டு, பிறகு உணவருந்துவோம். பின்னர் எமது படகுகளில் சற்றுநேரம் உறங்குவோம். பிறகு அகப்பட்டிருக்கும் மீன்களுடன் சேர்த்து வலைகளை இழுத்துக்கொண்டு அதிகாலை 4 மணியளவில் கரைக்குத் திரும்புவோம். ஆனால் கடந்த சில நாட்களாக இந்திய இழுவைப்படகுகளை அந்தப் பகுதிகளில் கண்ட பிறகு அதிகாலை 2 மணிக்கு முன்னதாக எமது மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிடுவார்கள்" என்று அவர் கூறினார். 

கொவிட் - 19 பீதி

தமிழ்நாட்டிலிருந்து வருவதாக அறியப்பட்ட கூடுதலான இந்திய இழுவைப்படகுகளைத் தங்களது கரையோரத்திலிருந்தே பார்க்கின்ற வடமாகாணத் தமிழ் மீனவர்கள் இந்தியாவில் கடுமையாகப் பரவிக்கொண்டிருக்கும் கொவிட் - 19 தொற்றுநோயின் காரணமாக கடல் எல்லையை அத்துமீறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த மீனவர்களைக் கைது செய்வதற்கு இலங்கைப்படை தயங்குகிறதோ என்று சந்தேகிக்கிறார்கள். 'தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற மீனவர்கள் கொரோனா வைரஸ் காவிகளாக வரக்கூடும் என்ற பயத்தில் இலங்கைப்படை அவர்களைக் கைதுசெய்யத் தயங்கக்கூடும் என்று எம்மில் பலர் நினைக்கிறோம்" என்று அருள்தாஸ் த இந்துவிடம் கூறினார்.

இலங்கையில் இதுவரையில் கொவிட் - 19 வைரஸின் தொற்றுக்கு 2350 பேர் இலக்கானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மொத்தப்பேரில் மிகப்பெரிய குழுவினராகக் கடற்படையினர் இருக்கிறார்கள். கடற்படையைச் சேர்ந்த 892 நோயாளர்கள் இதுவரையில் குணமடைந்திருக்கும் அதேவேளை, 13 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகக் கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சுரிய பண்டார கூறினார். 

'சட்டவிரோத மீன்பிடியைக் கண்காணிப்பதற்கான மாத்திரமல்ல, போதைப்பொருள் வர்த்தகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவும் கரையோரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறோம். கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு மாத்திரம் பிரத்யேகமானதல்ல. அது எந்தவொரு நாட்டிலிருந்தும் எமது எல்லைகளுக்கும் பிரவேசிக்க முடியும். அதனால் இந்திய மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அவர் த இந்துவிற்குக் கூறினார்.

சிலவேளைகளில் நாம் இழுவைப்படகுகளை விரட்டிவிடுகிறோம். சிலவேளைகளில் அவற்றைக் கைப்பற்றி மீனவர்களைக் கைதுசெய்கிறோம். இது இந்திய மீனவர்கள் கடலில் எந்தப்பகுதியில் நிற்கிறார்கள் என்பதையும், காற்றின் திசை போன்றவற்றையும் பொறுத்ததாகும். எமது கடற்படை அதனால் இயன்றளவிற்கு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார். 

- மீரா ஸ்ரீனிவாசன்