(எம்.எப்.எம்.பஸீர்)

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை   உடனடியாகக் கைது செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஓரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட  ஆபத்தானவர் என கருணா வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜலித் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக கருணா அம்மானும், சட்ட மா அதிபரும், பதில் பொலிஸ் மா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட அந்தக் கருத்தின் மூலம் அவர் சமூகக் கொலைக்குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கருத்தை ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகள்  கட்டளைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், பயங்கரவாத தடை சட்டம் , சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு  சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் கருணாவின் கருத்துக்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈட்டையும் தமக்கு பெற்றுத் தருமாரு குறித்த ரீட் மனுவில் கோரப்பட்டுள்ளது.