(நா.தனுஜா)

நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகைதந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவை ஊடகவியலாளரொருவர் புகைப்படமெடுப்பதற்கு முற்பட்ட போது, ரங்கஜீவ அவரை மேலாடையில் பிடித்து இழுத்துச்சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வழங்கு விசாரணைக்காக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் புதுக்கடை நீதிமன்றத்திற்கு வருகைதந்த போது அவரை ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படமெடுத்தமைக்காக அவரது மேலாடையில் பிடித்து இழுத்துச்சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தமையை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை வழக்கில் தொடர்புபட்டுள்ள ரங்கஜீவ, நீதிமன்ற வளாகத்தில் ஒரு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதற்கு யார் அதிகாரமளித்தது என்பதே எமக்குள்ள பிரச்சினையாகும். கடந்த காலத்தில் உயர்மட்டத்திலான ஊடக சுதந்திரத்தை வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஊடகங்களை முடக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருக்கிறது.

அதேவேளை நாம் நிலைநாட்டிய ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் முற்படுமாயின், அதற்கு எதிராக அனைத்து ஊடக நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகப் போராட வேண்டியது அவசியமாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மீண்டும் இந்த அரசாங்கம் தகவல்களை மறைப்பதற்காக ஊடகவியலாளர்களைக் காணாமலாக்குதல், படுகொலை செய்தல் உள்ளிட்ட இருண்ட யுகத்திற்கு அனைவரையும் அழைத்துச் செல்லுமாக இருந்தால், அதுகுறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.