-சஷி சேகர்-

கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை எங்களில் பலர் நித்திரைவிட்டெழும்பும் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய – சீன எல்லை நிலைகளுக்கு சென்று கொண்டிருந்தார். லடாக்கில் நிமூ பகுதியில் இடம்பெற்றுவரும் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டார். கள நிலைவரத்தை உறுதிசெய்துகொள்வதற்காக அவர் இந்திய இராணுவ வீரர்களையும் விமானப்படை வீரர்களையும் இந்தோ – திபெத்திய எல்லை பொலிஸ்படை அதிகாரிகளையும் சந்தித்தார். லெஹ் சாய்னிக் வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார்.

அச்சம் தருகின்ற அந்த வேளைகளில் பிரதமர் மேற்கொண்ட இந்த விஜயம் படைவீரர்களுக்கும் தேசத்துக்கும் உலகத்துக்கும் ஒரு செய்தியை அனுப்பியது. – எந்த தரப்பிலிருந்து வந்தாலும் நெருக்குதல்களுக்கு இந்தியா அடிபணியப்போவதில்லை என்பதே அந்த செய்தியாகும். கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15இல் நடைபெற்ற மோதல்களுக்கு பிறகு நாட்டில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற கவலையினதும் ஆத்திரத்தினதும் பின்புலத்தில் நோக்குகையில் பிரதமர் மேற்கொண்ட இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

பிரதமரின் விஜயம் படைவீரர்களின் மனத் தைரியத்தை அதிகரித்திருப்பதுடன் நாட்டுக்கு மீண்டும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது என்கின்ற அதேவேளை, சீனாவும் கூட அதை புரிந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி லெஹ் பகுதியில் இருந்த வேளையில், பெய்ஜிங்கில் அறிக்கையொன்றை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன என்றும் நிலைவரத்தை மோசமடைய செய்யக்கூடிய வகையில் எவரும் நடந்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறினார். சீனா தற்காப்பு நிலைக்கே போயிருக்கிறதா அல்லது எங்களுக்கு சில ஆலோசனைகளை கூறுகிறதா?

இத்தகைய அறிக்கையொன்றை சீனா வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருந்தாலும் பிரதமர் மோடியின் விஜயம் அதன் இலக்கை அடைந்திருக்கிறது. இது சீனாவின் அபிலாசைகளுக்கு குறுக்கே மேலும் ஒரு தடையாக அமையக்கூடும். உலகின் சகல  முக்கிய வல்லரசுகளுடனும் ஏற்கனவே முரண்பட்டிருக்கும் சீனா இப்போது அதன் கோடிப்புறத்திலுள்ள யானையுடன் முரண்படுகிறது அவ்வாறு  செய்வது வேதாளத்தின் (dragon's) அபிலாசைகளை பாதிக்கலாம்.

இங்கு நாம் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவதானிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களுக்கான பாதுகாப்பு செலவினத்தை 40சதவீதத்தினால் அண்மையில் அதிகரித்த அவர் உலகம் 1930ஆம் ஆண்டிலிருந்த நிலைவரத்தை நோக்கி திரும்பிச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.

1930ஆம் ஆண்டில் என்ன நடந்தது? அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருந்த நாட்கள் அவை. ஒருசில வருடங்களுக்குள் இரண்டாவது உலக மகா யுத்தம் மூண்டது. மூன்றாவது உலக மகா யுத்தத்தை  நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருப்பதாக நான் கூறவில்லை. ஆனால், சீனாவின் ஆக்கிரமிப்பு மனோபாவமும் அபிலாசையும் உலக இராஜதந்திரத்தை மாற்றியமைத்திருக்கிறது. சீனா எப்போதுமே இந்தியா, தாய்வான், வியட்னாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு உறவுமுறையை கொண்டிருக்கிறது. ஆனால் அவுஸ்திரேலியா இருமனப்போக்குடனேயே இருந்தது. இப்போது அது சீனாவின் போக்கை சரியாகப் புரிந்துகொண்டுள்ளது போன்று தெரிகிறது. பேரார்வம் கொண்ட சீனாவின் ஜனாதிபதி சி ஜின்பிங்கினால் கடைபிடிக்கப்படுகின்ற முரட்டுத்தனமான தேசியவாதக் கொள்கை (policy of aggressive nationalism) நீண்டகால அடிப்படையில் அவரது நாட்டுக்கு நன்மையானதாக அமையப்போவதில்லை. ஒருசில வாரங்களுக்கு முன்னர்  வரை சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் கனடா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஜேர்மனி உட்பட பல நாடுகள் அக்கறை கொண்டிருந்தன. ஆனால் நிலைவரம் வெகு துரிதமாகவே மாறிவிட்டது.

ஹொங்கொங்கிலும் சின்ஜியாங்கிலும் சீனா மேற்கொள்கின்ற அடக்குமுறை, கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையின்றி செயற்பட்டமை மற்றும் அதன் சூறையாடும் தன்மை வாய்ந்த கடல்சார் கொள்கை ஆகியவை காரணமாக உலகம் பெய்ஜிஙகின்; மீது சந்தேகம் கொள்ள தொடங்கியிருக்கிறது.

பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் அண்மையில் தனது பாராளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராக அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் கிளர்ச்சி செய்யும் ஹொங்கொங் பிரஜைகளுடன் தனது ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினார். ஹொங்கொங்கிலுள்ள 30இலட்சம் பிரஜைகளுக்கு பிரிட்டி~; பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பான யோசனையை கூட அவர் முன்வைத்தார். ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவாளர்களை ஒடுக்குவதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான அபராதத்தையும் தடைகளையும் விதிப்பதற்கு அமெரிக்க காங்கிரஸின் சனப் பிரதிநிதிகள் சபை ஹொங்கொங் சுயாட்சி சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. வங்கிகள் மீது தடைகள் விதிப்பதற்கும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் பெய்ஜிங்கை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருக்கும் அதேவேளை, பிரான்ஸ_ம் ஜப்பானும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்கு பிறகு இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ பெய்ஜிங்கின் ஒரு ஆதரவாளராக கருதப்படுகிறார். ஆனால், அவரது நாட்டில் மக்களின் உணர்வுகள் இந்த ஆதரவுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. கனடாவில் சீனாவுக்கிருக்கும் செல்வாக்கு 20க்கும் அதிகமான சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஹ_வாவிய் மற்றும் ஏனைய சீனக் கம்பனிகள் 5ஜி தொழில்நுட்ப வாணிபத்தில் எப்போதுமே அரசாங்கத்தின் உதவியுடனே தான் செயற்படும் என்று நினைப்பது தவறாகும். ஏற்கனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஹ_வாவிய் ஒரு பிரச்சினையாக கருதப்படுகிறது. தரவுகள் (data) முக்கியமானவையாக இருக்கின்ற இன்றைய உலகில் சீனக் கம்பனிகள் தங்களது தொழில்நுட்பம் மீது சலுகைகளை அளித்துவிட்டு எங்களது தரவுகளை எதற்காக பயன்படுத்துகின்றன என்ற சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியா சீனாவின் 59 செயலிகளை (app) தடை செய்திருக்கிறது. சீனக் கம்பனிகள் பல ஒப்பந்தங்களை இழந்தும் இருக்கின்றன. ஏனைய நாடுகளில் இந்த போக்கு தீவிரமடையுமானால் பெய்ஜிங் அதன் கொள்கைகளை மறு பரிசீலனை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.

சாத்தியமானளவுக்கு சீனாவுக்கு கதவை அடைக்கும் கொள்கை தொடர்வதற்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகிறார். அவரை எதிர்த்து நவம்பர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்  போட்டியிடவிருக்கும் ஜோ பிடனும் அதே கருத்தையே கொண்டிருக்கிறார். வல்லமை கொண்ட மேற்கு நாடுகளும் ஆசியாவின் பல நாடுகளும் சீனா மீது சந்தேகத்தை வளர்க்கக்கூடிய ஒரு நிலைவரம் நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் லத்தீன், அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆசியாவின் சிறிய நாடுகளும் சீனா மீது தங்கியிருக்கும் வகையிலான ஒரு உறவு முறைக்குள் இன்னமும் அகப்பட்டிருக்கக்கூடும்.

நிகழ்வுப்போக்குகள் எவ்வாறு அமைவதாக இருந்தாலும் அதற்கு அப்பால் ஒரு விடயம் மட்டும் நிச்சயமானது. சீனாவின் வலிந்து வம்புக்கிழுக்கும் மனப்போக்கு காரணமாக மனிதகுல வரலாற்றில் முன்னோக்கி செல்வதற்கான மகத்தான ஒரு அத்தியாயத்தை எழுதுவதற்கான சாத்தியப்பாடுகளுக்கு குறுக்கே அது ஒரு தடையை போட்டிருக்கிறது. கிறிஸ்துவுக்கு பின் முதல் நூற்றாண்டு தொடக்கம் 1820ஆம் ஆண்டு வரை இந்தியாவும் சீனாவும் உலகின் நிகர உள்நாட்டு உற்பத்திகளில் சுமார் அரைவாசியை உருவாக்கிக் கொண்டிருந்தன என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த உண்மை. இரு நாடுகளும் சேர்ந்து செயற்பட்டால் கடந்த காலத்தின் அதே புகழ் மிக்க யுகத்துக்கு மீண்டும் திரும்பி உலகுக்கு ஒரு களங்கரை விளக்கமாக மிளிர முடியும். ஆனால், சீனா பிராந்தியங்களை கைப்பற்றும் அதன் பேராசையினாலும் சர்வதேச சட்டங்களை அலட்சியம் செய்கின்ற போக்கினாலும் நிலைவரத்தை தற்போது குழப்பியடித்திருக்கின்றது.

(இந்துஸ்தான் ரைம்ஸ்)

(கட்டுரையாளர் இந்துஸ்தான் இந்தி பத்திரிகையின் பிரதம ஆசிரியராவார்)